சிவகங்கை லாக் அப் மரணம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
சிவகங்கை லாக் அப் மரணம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்றது. அப்போது லாக் அப் மரணம் தொடர்பான வீடியோ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் விசாரணையை சிபிஐ அல்லது சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்ற வேண்டும் என்று அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
மேலும் புகார்தாரர் நிகிதா, ஐஏஎஸ் அதிகாரியின் நெருங்கிய உறவினர் என்பதால் வழக்கு பதியாமல் தாக்கி உள்ளனர் என்று வாதிட்டார். திருப்புவனம் ஆய்வாளர், எஸ்.பி, நன்றாக கவனியுங்கள் என கூறியதாக தலைமை காவலர் கூறியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். இது முழுக்க முழுக்க சட்டவிரோதமாக நிகழ்ந்த காவல் மரணம் என அஜித்குமார் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் “ புலனாய்வு செய்வதற்கே காவல்துறை, அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? முழு உண்மையையும் சொல்ல மறுக்கிறீர்கள்? காவல் நிலையங்களில் சிசிடிவிகள் முறையாக வேலை செய்கிறதா? திருட்டு வழக்கில் ஒருவர் விசாரணை என்ற பெயரில் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்.. அடித்து விசாரியுங்கள் என கூறிய காவல் ஆய்வாளர், டிஎஸ்பி மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டிஜிபி பதிலளிக்க வேண்டும்.. பிரேத பரிசோதனை அறிக்கையை நடுவண் நீதிமன்ற நீதிபதிக்கு ஏன் அளிக்கவில்லை.. மாவட்ட எஸ்.பியை ஏன் இடமாற்றம் செய்தீர்கள்? சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும்.. அஜித்தை எதற்காக வெளியே வைத்து விசாரணை செய்தீர்கள்? ஏன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யவில்லை..” என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.. இந்த வழக்கை நீர்த்துப் போக செய்தால், நீதித்துறை தலையிட வேண்டியிருக்கும்.. அஜித்குமார் மரணத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை மதியம் 2.15 ஒத்திவைத்தனர்.. மேலும் விசாரணை அறிக்கையை மதியம் 2.30 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.