வானில் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டே, ஜன்னல் வழியாக பூமியின் அழகை ரசிப்பது என்பது ஒரு அலாதியான அனுபவம். ஆனால், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அந்த அமைதியான தருணங்களுக்குள் சமூக வலைதள அறிவிப்புகள் ஊடுருவ தொடங்கியுள்ளன. ஒரு காலத்தில் வெளி உலகத் தொடர்பின்றி ஒரு ‘டிஜிட்டல் டிடாக்ஸ்’ இடமாக இருந்த விமானப் பயணம், இப்போது ‘இன்-ஃபைலைட் வைஃபை’ (In-flight Wi-Fi) வசதியால் ஒரு பறக்கும் அலுவலகமாகவே மாறி வருகிறது.
இந்திய வான்பரப்பில் இந்த வசதி இப்போது ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. குறிப்பாக, ஏர் இந்தியா நிறுவனம் தனது சில உள்நாட்டு வழித்தடங்களில் இலவச இணைய வசதியை அறிமுகப்படுத்தி, பயண அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. தொழிலதிபர்கள் மற்றும் அவசரப் பணிகளுக்காகப் பயணிப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது. நீண்ட தூர சர்வதேச பயணங்களின் போது தரையிறங்குவதற்கு முன்பே தங்குமிடம் மற்றும் வாகன ஏற்பாடுகளை செய்யவும், குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கவும் இந்த இணைய வசதி பேருதவியாக இருப்பதாக பயணிகள் கருதுகின்றனர்.
இருப்பினும், இந்த ‘வானக இணையம்’ அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தவில்லை. ஒரு குறுகிய மூடிய அறைக்குள் அனைவரும் அலைபேசிகளில் மூழ்கிக் கிடப்பது, விமானப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு சவாலாக அமையலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பணிப்பெண்கள் வழங்கும் முக்கியப் பாதுகாப்பு அறிவிப்புகளை கவனிக்காமல் போவது, அவசர காலங்களில் சீட் பெல்ட் விதிகளை புறக்கணிப்பது போன்ற ஆபத்துகள் இதில் ஒளிந்துள்ளன.
மறுபுறம், சக பயணிகளின் சௌகரியமும் இங்கே கேள்விக்குறியாகிறது. சிலர் சத்தமாக வீடியோக்களைப் பார்ப்பதும், ரீல்ஸ் எடுப்பதும், வீடியோ அழைப்புகளில் உரையாடுவதும் மற்றவர்களின் அமைதியைக் குலைப்பதாக புகார்கள் எழுகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி வசதிகளைக் கொடுத்தாலும், வானில் பறக்கும்போது அந்த அமைதியையும் பாதுகாப்பையும் விரும்புபவர்கள், வை-ஃபை வசதியை ஒரு தேவையற்ற இடையூறாகவே பார்க்கிறார்கள்.
Read More : 77 வயது மூதாட்டியை சிதைத்த போதை இளைஞர்..!! பணத்திற்காக பாலியல் பலாத்காரம்..!! குலுங்கிய குடியாத்தம்..!!



