மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே, கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவனை, மனைவியே கூலிப்படை ஏவிக் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி செந்தில்குமார், தனது மனைவி காவ்யாவின் நடத்தையில் சந்தேகம் இருப்பதை அறிந்தும், குடும்ப நலன் கருதி அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டார்.
ஏற்கனவே அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் காவ்யா வீட்டை விட்டு ஓடியபோது, பெரியோர்கள் முன்னிலையில் சமரசம் பேசி செந்தில்குமார் அவரை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால், கணவனின் இந்த பெருந்தன்மை காவ்யாவின் மனதை மாற்றவில்லை. மாறாக, கணவனுக்குத் தெரியாமல் குடும்பப் பணத்தை காதலன் கார்த்திக்குக்கு வாரி வழங்கியதோடு, ரகசிய தொடர்பையும் தொடர்ந்து வந்துள்ளார்.
தொடர்ந்து பணத்தை இழப்பதையும், மனைவியின் தவறான போக்கையும் செந்தில்குமார் கண்டித்ததால், அவரை தீர்த்துக்கட்ட காவ்யா முடிவு செய்தார். இதற்காக காதலன் கார்த்திக்குடன் இணைந்து ஒரு ஸ்கெட்ச் போட்டுள்ளார். சம்பவத்தன்று அதிகாலை, செந்தில்குமார் தனது டீக்கடையை திறப்பதற்காக சென்றபோது, விடிய விடிய மது அருந்திவிட்டு போதையில் காத்திருந்த கார்த்திக் மற்றும் அவரது 6 பேர் கொண்ட கும்பல், செந்தில்குமாரை சூழ்ந்துகொண்டது.
கண் இமைக்கும் நேரத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், செந்தில்குமாரின் கை துண்டிக்கப்பட்டு, முகம் சிதைந்த நிலையில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சரிந்தார். இந்த கொடூர கொலை குறித்து தகவல் அறிந்த சிலைமான் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றினர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், காவ்யாவின் செல்போன் உரையாடல்கள் அவரது துரோகத்தை வெளிச்சமிட்டு காட்டின.
இதையடுத்து, காவ்யாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையில், போலீசாருக்கு அஞ்சித் தலைமறைவாக இருந்த காதலன் கார்த்திக் உள்ளிட்ட 3 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். தற்போது கைதான அனைவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவமும் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



