திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே உள்ள துராப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். பெயிண்டராகப் பணிபுரியும் இவருக்கும், இவரது மனைவி பிரியாவுக்கும் (26) இரண்டு மகன்கள் உள்ளனர். சமீப காலமாக, பிரியாவின் நடத்தை மீது சிலம்பரசனுக்குச் சந்தேகம் ஏற்படவே, கணவன் – மனைவிக்குள் அடிக்கடி சண்டை நடந்துள்ளது.
இதனால் கோபமடைந்த பிரியா, பெரியபாளையம் அருகே உள்ள புதுப்பாளத்தில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்வதும், பின்னர் சமாதானமாகி கணவருடன் வந்து குடித்தனம் நடத்துவதும் வாடிக்கையாக இருந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக பிரியா தனது பெற்றோரை தொடர்புகொள்ளாமல் இருந்துள்ளார்.
இதனால் கவலையடைந்த பிரியாவின் தந்தை சீனிவாசன், இரண்டு நாட்களுக்கு முன்பு துராப்பள்ளத்தில் உள்ள மகள் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கே மகள் இல்லாததை கண்டு மருமகன் சிலம்பரசனிடம் விசாரித்துள்ளார். பிரியா வெளியே சென்றுவிட்டதாக அவர் சமாளித்த நிலையில், பேரன்களும் தங்கள் தாய் இரண்டு மாதங்களாக வீட்டில் இல்லை என்று கூறியதால், சீனிவாசனுக்கு சந்தேகம் வலுத்தது.
இதையடுத்து, மகள் பிரியாவை காணவில்லை என்று ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் அளித்தார். புகாரின் பேரில், சிலம்பரசனைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி இரவு மனைவி பிரியாவுடன் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த சிலம்பரசன் அவரைக் கழுத்தை நெரித்துக் கொன்றது அம்பலமானது.
மேலும், பிரியாவின் உடலை ஒரு டிரம்மில் அடைத்து, தனது மோட்டார் சைக்கிளில் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் எடுத்துச் சென்று, ஏழு கண் பாலத்தை ஒட்டிய சுடுகாட்டின் அருகே புதைத்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மனைவியைக் கொன்றுவிட்டு கடந்த இரண்டு மாதங்களாக எதுவும் தெரியாதது போல் சகஜமாக இருந்து வந்த சிலம்பரசனைப் போலீசார் கைது செய்தனர்.
மேலும், கொலை செய்த நபர் ஒருவரால் மட்டும் உடலை அப்புறப்படுத்திப் புதைத்திருக்க முடியுமா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதன் அடிப்படையில், இந்தச் செயலில் அவருக்கு வேறு யாரேனும் உதவி செய்தார்களா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Read More : அசைவப் பிரியர்களே உஷார்..!! மீன் சாப்பிட்டதும் இந்த 5 உணவுகளைத் தொட்டால் என்ன ஆகும் தெரியுமா..?



