கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனில்குமார் (38). இவர் மளிகைக் கடையையும் நடத்தி வந்தார். இவரது மனைவி தன்யா (34) மளிகை கடையை நிர்வகித்து வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் அனில்குமார் தனது கடைக்கு வந்தபோது, மனைவி தன்யா அதே பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் மதுகுமார் (40) என்பவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதை கணவர் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பொது இடத்தில் மனைவியை அவமானப்படுத்த விரும்பாத அவர், வீட்டிற்குச் சென்ற பிறகு அவரிடம் வாக்குவாதம் செய்து, கடைக்கு வர வேண்டாம் என எச்சரித்துள்ளார். ஆனால், இருவரும் தொடர்ந்து ரகசியமாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அனில்குமார், தன்யாவை அடித்து உதைத்துள்ளார். பின்னர், இதை மதுகுமாரிடம் போனில் புலம்பிய தன்யா, உடனடியாக மதுகுமாரை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு வந்த மதுகுமார், அனில்குமாரை அரிவாளால் வெட்ட முயன்றார். இதில் காயமடைந்த அனில்குமார், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் கைது செய்யப்பட்ட அவர், பின்னர், ஜாமீனில் வெளியே வந்தார்.
சிறையில் இருந்து வெளிவந்த பிறகும் மதுகுமார் தன்யாவுடனான தொடர்பை நிறுத்தவில்லை. இதனால், மீண்டும் ஆத்திரமடைந்த அனில்குமார், தன்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது “நமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவில்லையா?” என்று கோபமாகக் கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால், ஆவேசத்தில் இரும்பு கம்பியால் தன்யாவை சரமாரியாக அடித்துள்ளார்.
பின்னர், மனைவி உயிரிழந்துவிட்டதாக நினைத்து பயந்து போன அனில்குமார், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே, மளிகைக் கடைக்கு வந்த சிலர், தன்யாவின் முனகல் சத்தம் கேட்டு அவரை மீட்டு, கேரளா தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குச் சேர்த்தனர். தற்போது அவர் நலமாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இச்சம்பவத்திற்கு முக்கிய காரணமான தன்யாவின் கள்ளக்காதலன் மதுகுமாரை போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



