பெங்களூருவில் தனது அந்தரங்க தனியறை நெருக்கத்தை பதிவு செய்து அதை நண்பர்களுடன் பகிர்ந்ததாக, கணவன் மீது மனைவி அளித்த அதிர்ச்சி புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்தக் குற்றச்சாட்டை கணவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். மாறாக, தான் மனைவியால் சித்ரவதை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் புட்டேனஹள்ளி காவல் நிலையத்தில், 32 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சமீபத்தில் ஒரு புகாரை அளித்தார். அதில், “எனது கணவர் ரகசியமாக படுக்கை அறையில் கேமரா பொருத்தி, எங்களின் அந்தரங்க வீடியோ பதிவு செய்து, அதை தனது நண்பர்கள் மத்தியில் பகிர்ந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்நிலையில், இந்தப் புகாருக்கு உள்ளான 35 வயதுடைய கணவர் சையது இனாமுல், சமூக வலைதளங்களில் ஒரு விளக்கம் கொடுத்து வீடியோவை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், தனது மனைவி கூறிய குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர், “எனக்கு ஒரே ஒரு திருமணம் தான் நடந்தது. வேறு எந்த பெண்களுடனும் எனக்குத் தொடர்பு இல்லை. ஆனால், என் மனைவியால் எனக்குப் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. திருமணத்திற்கு முன்பாகவே அவருக்கு ரூ.13 லட்சம் வரதட்சணை கொடுத்தேன். திருமணத்திற்குப் பிறகு, தினமும் அவர்தான் என்னை அந்தரங்க உறவுக்கு வற்புறுத்தினார். சில நேரங்களில் மனநிலை சீராக இல்லாதது போலவே அவர் நடந்துகொண்டு என்னை துன்புறுத்தினார்,” என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
கணவர் மீதான மனைவி கொடுத்த புகார் மற்றும் அதற்குப் பதிலடியாக கணவர் வெளியிட்டுள்ள வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்துக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.