திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கொசவபட்டி தனிஷ்கோடி காலனியில் மர வேலை செய்யும் செந்தமிழ்ச்செல்வன் என்பவர் தனது மனைவி சௌமியா மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வந்த ஸ்டாலின் என்பவருக்கும் செந்தமிழ்ச்செல்வனின் மனைவி சௌமியாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இதனை செந்தமிழ்ச்செல்வன் பலமுறை கண்டித்தும் அவர்கள் உறவை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, சௌமியா தனது செல்போனில் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். இதை அறிந்த செந்தமிழ்ச்செல்வன், சௌமியாவை மீண்டும் கண்டித்துள்ளார்.
இந்த ஆத்திரத்தில், ஸ்டாலின் அவரது தந்தை பெரியசாமி மற்றும் சகோதரர் வெங்கடேஷ் ஆகியோருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, செந்தமிழ்ச்செல்வன் தனது மைத்துனர் மதன குமார், நண்பர்கள் பாலமுருகன், பிரகாஷ் மற்றும் சித்தப்பா காந்தி ஆகியோருடன் ஸ்டாலின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கொடூரமான தாக்குதல் நடத்தினர்.
இந்த கொலைவெறித் தாக்குதலில், ஸ்டாலினுக்கு பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டன. இதைத் தடுக்க வந்த அவரது தந்தை பெரியசாமிக்கு முதுகு மற்றும் தொடையில் கத்திக் குத்துகளும், அவரது தம்பி வெங்கடேஷுக்கு வெட்டுக் காயங்களும் ஏற்பட்டது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள், செந்தமிழ்ச்செல்வன் உட்பட அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர், அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் துறைக்குத் தகவல் கொடுத்து, காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஸ்டாலினைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், படுகாயமடைந்த அவரது தந்தை பெரியசாமி மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அம்பிளிக்கை காவல்துறையினர், அப்பகுதியில் தலைமறைவாக இருந்த செந்தமிழ்ச்செல்வன் உட்பட 5 பேரையும் உடனடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : ஒரு ரூபாய் நாணயம் தயாரிக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா..? பலருக்கும் தெரியாத தகவல்..!!