சிங்கப்பூரில் எலக்ட்ரிசியனாக பணியாற்றி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், தனது மனைவி சந்தனமாரியம்மாளின் இன்ஸ்டாகிராம் நடவடிக்கைகள் மற்றும் பண விவகாரங்களால் ஆத்திரமடைந்து, அவரை நடுரோட்டில் வைத்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். 2017இல் திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.
சிங்கப்பூரில் கடினமாக உழைத்து பாலமுருகன் அனுப்பி வைத்த லட்சக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் நகைகளை சந்தனமாரியம்மாள் முறையாக பராமரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதிலும், பல்வேறு ஆண்களுடன் நட்புறவில் இருந்ததாலும் தம்பதிக்குள் விரிசல் ஏற்பட்டது. இதனால் சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பிய பாலமுருகன், பணம் மற்றும் நகைகள் குறித்து கணக்கு கேட்டபோது தகராறு முற்றவே, இருவரும் கடந்த 6 மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
ஏற்கனவே குடும்பப் பிரச்சனையில் இருந்த நிலையில், சந்தனமாரியம்மாளின் தம்பி, பாலமுருகனின் தாய்மாமனான காளிமுத்துவை அரிவாளால் வெட்டிய சம்பவம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலானது. இதனால் தனது குடும்ப மானம் போனதற்கும், தாய்மாமன் மீதான தாக்குதலுக்கும் பழிவாங்க பாலமுருகன் சதித்திட்டம் தீட்டினார். சம்பவத்தன்று மாலை தூத்துக்குடி கணேஷ் நகர் பகுதியில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த சந்தனமாரியம்மாளை வழிமறித்த பாலமுருகனும் காளிமுத்துவும், ஓட ஓட விரட்டி அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
“வேண்டாம் மாமா, வலிக்குது” என அலறிய அந்தப் பெண் கூறியும் அவர்கள் விடவில்லை. இந்தக் கொடூரத்திற்குப் பின், இருவரும் தென்பாகம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். கொலையின் போது காயமடைந்த பாலமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : தாய் வழி சொத்தில் கணவர், பிள்ளைகளுக்கு உரிமை உள்ளதா..? உயில் இல்லாத பட்சத்தில் என்ன செய்வது..?


