தெலங்கானா மாநிலம் மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தில் அரங்கேறிய ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதலைத் தொடர தடையாக இருந்த கணவனை, மனைவியே ஒரு மந்திரவாதியை ஏவிக் கொலை செய்த அதிர்ச்சி தகவல் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
நாகர் கர்னூல், ஸ்ரீபுரத்தைச் சேர்ந்தவர் ராமுலு (35). பிளம்பராக வேலை செய்து வந்த இவருக்கும், இவரது மனைவி மானசா (35) என்பவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராமுலுவின் வீட்டில் நகைகள் திருடு போயிருந்தன. அந்தத் திருடனை அடையாளம் காணும் நோக்கில், ராமுலுவும் மானசாவும் சுரேஷ் (27) என்ற மந்திரவாதியை அணுகியுள்ளனர்.
திருட்டுப் போனது குறித்துப் பூஜை நடத்தி ஆலோசனை வழங்கியபோது, மானசாவுக்கும் மந்திரவாதி சுரேஷுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி, இருவரும் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இந்தத் தகவலைக் கணவர் ராமுலு அறிந்ததும், அவர்களது இல்லற வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது.
கள்ளத்தொடர்பைக் கைவிடுமாறு ராமுலு எச்சரித்ததால், தம்பதியினருக்கு இடையே அடிக்கடி கடுமையான தகராறுகள் ஏற்பட்டன. இதனால், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ராமுலுவைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்த மானசா, மந்திரவாதி சுரேஷிடம் அதற்கான ஆலோசனையைக் கேட்டுள்ளார்.
இதற்காக, சுரேஷ் தனது ஊழியர் பாலபீர் மற்றும் மைத்துனர் ஹனுமந்து ஆகிய இருவருக்கும் ஆளுக்கு ரூ.2.80 லட்சம் தருவதாகக் கூறி, இந்தக் கொலைத் திட்டத்தைத் தீட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி, ஒரு உறவினர் திருமணத்தில் கலந்துகொள்வதாக கூறி மானசா தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். தான் இல்லாத நேரத்தில் கணவரை கொலை செய்தால் யாருக்கும் சந்தேகம் வராது என்று சுரேஷிடம் அவர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
அதன்படி, சுரேஷ், ராமுலுவை பெத்த முதுநூருவின் புறநகர்ப் பகுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு அவருக்கு மது கொடுத்துப் போதை ஏற்றியுள்ளனர். பின்னர், ராமுலுவின் வாய் மற்றும் மூக்கில் ஸ்டிக்கர் ஒட்டி மூச்சுத் திணற செய்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். கொலைக்குப் பின், அது ஒரு விபத்தாக காட்ட, ராமுலுவின் உடலில் காயங்களை ஏற்படுத்திச் சாலையோரம் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
பின்னர், சாலையோரம் உடல் கிடந்ததைக் கண்ட உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் அது விபத்தல்ல, கொலை என்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், நடத்திய தீவிர விசாரணையில், ராமுலுவின் மனைவி மானசா மற்றும் மந்திரவாதி சுரேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து இந்தக் கொலையை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.
இதனையடுத்து, மானசா, சுரேஷ், பாலபீர், மற்றும் ஹனுமந்து ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கள்ளக்காதல் கொலைச் சம்பவம் நாகர் கர்னூல் மாவட்டத்தில் பெரும் அதிர்வலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



