திருமணத்திற்கு பிறகு வேலையை இழந்த கணவனை, தொடர்ந்து கேலி செய்து வந்த மனைவியின் செயல்பாடு, மன ஒடுக்குமுறையாகக் கருதப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குரூத் பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியின் முதல்வராக பணியாற்றும் மனைவி, வழக்கறிஞராக இருந்த தனது கணவனின் வேலை இழப்பை அவமானப்படுத்தியதுடன், நிதிச்சுமையை காரணமாக்கி தேவையற்ற பணம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்.
மனைவியின் இந்த மாறுபாடுகள் அவரது மனநிலையை பெரிதும் பாதித்ததாகக் கூறி, கணவர், விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜனி துபே மற்றும் அமிதேந்திர கிஷோர் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, “ஒருவர் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் வேலை இழப்பது இயல்பானதே. அந்த நேரத்தில் துணைவராக இருக்கும் மனைவியிடம் இருந்து ஊக்கம் மற்றும் புரிதல் தேவைப்படும்.
ஆனால், கேலி மற்றும் அடிக்கடி அவமதிப்புகள், மன வேதனையை மேலும் தீவிரமாக்குகின்றன. கொரோனா போன்ற பொருளாதார சிக்கல்கள் நிறைந்த சூழலில், வாழ்க்கைத் துணையிடம் இருந்து உணர்ச்சி ஆதரவைப் பெறாதது மட்டுமல்லாது, தேவையற்ற நிதி அழுத்தங்களும் மன ஒடுக்குமுறைக்கு நேரடி காரணமாக அமைந்துள்ளது” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த வழக்கில் மனைவியின் செயல், திருமண உறவின் அடிப்படை நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இருப்பதாகக் கருதி, கணவரின் மனநிலையை ஏற்றுக்கொண்டு, விவாகரத்துக்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு, திருமண உறவுகளில் ஒருவரின் மனநிலையும் நலனும் எவ்வளவு முக்கியம் என்பதையும், உறவில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் மரியாதையுடன் புரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டுகிறது. திருமணம் என்பது ஒப்புதல், பொறுப்பு, புரிதல் ஆகிய மூன்றின் மேல் கட்டப்பட்ட பந்தம். அதில், துணையின் காயப்படுத்தும் வார்த்தைகள் கூட மன வேதனையாக மாறலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.