மத்தியப்பிரதேச மாநிலம் ததியாவில், 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி தீர்த்துக்கட்டிய கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி, சிந்த நதி பாலத்தின் அடியில் உள்ள அடர்ந்த புதர்களுக்குள் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் அடையாளம் தெரியாத நிலையில் இருந்த அந்த சடலத்தை போலீஸார் முறைப்படி நல்லடக்கம் செய்திருந்தனர்.
ஆனால், காணாமல் போன தனது உறவினர் குறித்து ஹன்ஸ்ராஜ் வர்மாவின் குடும்பத்தினர் அளித்த புகாரை தொடர்ந்து, புதைக்கப்பட்ட சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, விசாரணையை முடுக்கிவிட்ட போலீஸார் அதிர்ச்சிகரமான உண்மைகளை கண்டறிந்தனர்.
படுகொலை செய்யப்பட்ட ஹன்ஸ்ராஜின் மனைவி பபிதா வர்மாவுக்கும், அவரது உறவினரான ஹேமந்த் ஆர்யாவுக்கும் இடையே திருமணத்தை தாண்டிய முறையற்ற உறவு இருந்துள்ளது. தனது கணவர் மது அருந்திவிட்டுத் தன்னைத் துன்புறுத்துவதாகக் கூறி வந்த பபிதா, தனது காதலனுடன் இணைந்து கணவனை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளார். இந்தச் சதித் திட்டத்தின்படி, கடந்த பிப்ரவரி 5-ம் தேதி ஹேமந்தும் அவரது நண்பர் அனிலும் சேர்ந்து ஹன்ஸ்ராஜை மது அருந்த வருமாறு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆளில்லாத பகுதியில் வைத்து, தாங்கள் வைத்திருந்த மஃப்ளரால் ஹன்ஸ்ராஜின் கழுத்தை இறுக்கிக் கொன்றுவிட்டு, சடலத்தைச் சத்தமில்லாமல் நதிக்கரை புதரில் வீசிவிட்டுத் தப்பியுள்ளனர். இந்த மர்ம கொலையில் துப்பு துலக்கப் போலீஸாருக்குப் பெரிதும் உதவியது செல்போன் அழைப்பு தரவுகள் (CDR) மட்டுமே. பபிதா மற்றும் ஹேமந்த் ஆகியோருக்கு இடையே பரிமாறப்பட்ட தொடர் அழைப்புகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்துப் போலீஸார் வலைவீசியபோது, உண்மைகள் ஒவ்வொன்றாக அம்பலமானது.
இறுதியில், திட்டமிட்டு கொலை செய்த மனைவி பபிதா, அவரது காதலன் ஹேமந்த் மற்றும் கொலையில் உடந்தையாக இருந்த அனில் ஆகிய மூவரையும் ததியா போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



