தமிழ்நாட்டில் உள்ள சுமார் 2 கோடிக்கும் அதிகமான அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 3,000 ரொக்கப் பணம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரொக்கப் பணம் மட்டுமன்றி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் இலவச வேட்டி-சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இது தவிர, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இந்த உதவித்தொகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த மெகா திட்டத்திற்காக தமிழக அரசு சுமார் 6,936.17 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. முன்னதாக, பொங்கல் தொகுப்பிற்காக மட்டும் குறைவான நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், ரொக்கப் பணம் கிடைக்குமா என்ற சந்தேகம் நிலவியது. தற்போது முதல்வர் ஸ்டாலின் 3,000 ரூபாய் பண உதவியை உறுதி செய்துள்ளதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிதி நெருக்கடி காரணமாகப் பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவாக இந்த ஆண்டு மிக உயரிய தொகையை அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த முறை இனிப்பான செய்தி கிடைத்துள்ளது. பொங்கல் பண்டிகையை சிறப்பான முறையில் கொண்டாட, C மற்றும் D பிரிவு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மொத்தம் 183.86 கோடி ரூபாய் தற்காலிக போனஸ் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதியுள்ள ஊழியர்கள் அதிகபட்சமாக ரூ. 3,000 வரையிலும், பகுதிநேர மற்றும் தொகுப்பூதிய ஊழியர்கள் ரூ. 1,000 வரையிலும் சிறப்பு போனஸாக பெற உள்ளனர். இதன் மூலம் சுமார் லட்சக்கணக்கான அரசுப் பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், திமுக அரசின் இந்த நகர்வு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. தமிழகத்தின் மொத்த கடன் 9 லட்சம் கோடியைத் தாண்டியுள்ள போதிலும், இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கும் இந்தப் பலன்களை வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
Read More : அதிர்ச்சி..!! பட்ஜெட்டை பதம் பார்க்கும் AI..!! ஸ்மார்ட்போன், லேப்டாப் விலைகள் அதிரடியாக உயருகிறது..!!



