சென்னை ராயப்பேட்டையில் தெருநாய் கடித்து தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு ரேபிஸ் நோயால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, தடுப்பூசி போட்ட பின்னரும் ரேபிஸ் தொற்று ஏற்படுமா..? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து அவசரகால சிகிச்சை சிறப்பு மருத்துவர் சையது ஹாரிஸ் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், தடுப்பூசி போட்டவர்களுக்கு ரேபிஸ் நோய் வருவதற்கான வாய்ப்பு மிக குறைவு என்று தெரிவித்துள்ளார். ஒருவேளை தடுப்பூசி தயாரிப்பில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு வருவது வரை, அதன் வெப்பநிலையைப் பராமரிக்கும் நடைமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், ஊசியின் திறன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாய் கடித்த பிறகு முதல் 12 மணி நேரத்திற்குள், அதிகபட்சமாக 24 மணி நேரத்திற்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் மருந்து எடுத்துக் கொண்டால், பின்விளைவுகளை தவிர்க்கலாம்.
ரேபிஸ் தடுப்பூசி நடைமுறைகள் :
ரேபிஸ் நோயை தடுக்க, ஒருவருக்கு நாய் கடித்தால் நான்கு தவணைகளாகத் தடுப்பூசி போடப்படுகிறது. இணை நோய் பாதிப்புகள் உள்ளவர்களுக்கு 5 தடுப்பூசிகள் போடப்படும். மேலும், வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் அல்லது அடிக்கடி நாய் கடிக்கு வாய்ப்புள்ளவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காப்புத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளலாம்.
100% ரேபிஸ் நோயை தடுக்க, தடுப்பூசியை சரியான நேரத்தில், சரியான முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும். நாய் கடித்தவுடன், பாதிக்கப்பட்ட இடத்தை உடனடியாக ஓடும் நீரில் கழுவிவிட்டு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இதன் மூலம் உடலில் தொற்று பரவுவதை தடுக்க முடியும். முறையாக தடுப்பூசி நடைமுறைகளைப் பின்பற்றினால், பொதுமக்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More : கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை மனைவிக்கு அனுப்பிய கணவன்..!! கடைசியில் நடந்த பயங்கரம்..!!



