குறைந்த விலை, சௌகரியம், பாதுகாப்பு இந்த மூன்றையும் ஒரே நேரத்தில் வழங்கக்கூடிய பொதுப் போக்குவரத்து அமைப்பு என்றால் அது இந்திய ரயில்வே தான். தினசரி கோடிக்கணக்கான மக்கள் கிராமத்திலிருந்து நகரத்துக்கும், மாநிலத்திலிருந்து மாநிலத்துக்கும் பயணிக்கிறார்கள்.
ஆனால், பயணத்தின் நடுவே ஒரு பயணி உயிரிழந்தால் என்ன நடக்கும்? அந்த நபரின் குடும்பத்துக்கு ரயில்வேயிடமிருந்து இழப்பீடு கிடைக்குமா? என்ற கேள்வி பலருக்கும் தெரியாத ஒன்று. இதற்கான விதிகள் தெளிவாக உள்ளன, அதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இரண்டு ரயில்கள் மோதல், தடம் புரண்டல், அல்லது பாதுகாப்பு குறைபாடு காரணமாக ரயில் பயணி உயிரிழந்தால், இந்திய ரயில்வே நிச்சயமாக அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும். இது ரயில்வேயின் சட்டபூர்வ பொறுப்பாகும். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குவது அவசியமான கடமையாகக் கருதப்படுகிறது.
ஒரு பயணி மாரடைப்பு, பக்கவாதம், அல்லது பிற உடல்நலப் பிரச்சனை காரணமாக ரயிலில் இயற்கையாக இறந்தால், ரயில்வே பொதுவாக இழப்பீடு வழங்காது. ஏனெனில் இது ரயில்வே காரணமாக ஏற்பட்ட மரணம் அல்ல. இது “தனிநபரின் உடல்நலப் பிரச்சனை காரணமாக” ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.
ரயில்வே அலட்சியம் இருந்தால் மட்டும் இழப்பீடு பெறலாம்:
இயற்கை மரணத்திற்கும் சில சந்தர்ப்பங்களில் இழப்பீடு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால், அதற்காக ரயில்வேயின் அலட்சியம் நிரூபிக்கப்பட வேண்டும். உதாரணமாக: பயணியின் உடல்நிலை மோசமடைந்தபோது, ரயில்வே அதிகாரிகள் மருத்துவ உதவி வழங்கத் தவறினால், ரயில் பெட்டியின் கதவுகள் அல்லது ஜன்னல்கள் சேதமடைந்து விபத்து ஏற்பட்டால், நடைமேடை அல்லது பெட்டியின் உள்ளே பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததால் பிரச்சனை ஏற்பட்டால், இவை அனைத்தும் ரயில்வே அலட்சியமாகக் கருதப்படும்.
இப்படிப்பட்ட வழக்குகளில், குடும்பத்தினர் “இது இயற்கை மரணம் மட்டுமல்ல, ரயில்வே தவறும் காரணம்” என்பதை நிரூபிக்க வேண்டும். பயணியின் மரணத்திற்கு ரயில்வே அலட்சியம் காரணம் என நீங்கள் நம்பினால்: உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும். பயணச்சீட்டு, இறப்புச் சான்றிதழ், மருத்துவ ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவும். விசாரணையில் ரயில்வே பக்கம் தவறு கண்டறியப்பட்டால், விதிகளின்படி ரூ.5 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.



