தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம், கடந்த ஜூலை 15ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 14 ஆம் தேதியுடன் தனது முதல் கட்டத்தை முடித்துவிட்டது. இதில் பெரும்பாலானா மக்கள் கலந்து கொண்டு, அரசு திட்டங்களுக்கான மனுக்களை சமர்ப்பித்தனர். குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக பெண்கள் அதிக ஆர்வம் காட்டி, விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.
இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என அரசு உறுதியளித்திருந்த நிலையில், தற்போது அந்த காலக்கெடு முடிவடைந்துள்ளதால், புதிய விண்ணப்பதாரர்கள் தங்களது மனுக்கள் குறித்து விரைவில் அப்டேட்கள் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனாலும், தற்போது வரை ஆன்லைன் மூலம் விண்ணப்ப நிலையைத் தெரிந்து கொள்ளும் வசதி வழங்கப்படாததால், அதிகாரப்பூர்வ தகவல்களை பெறும் முயற்சியில் பலரும் உள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (kmut.tn.gov.in) மூலமாக விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ள முயற்சிக்கும் பெண்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இன்றைய நிலவரப்படி, அந்தத் தளத்தில் காணப்படும் “விண்ணப்ப நிலை” பகுதி வழியாக அதிகாரிகள் மட்டுமே உள்நுழைந்து தகவல்களைப் பார்வையிட முடியும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு ஏராளமான பெண்கள் மனு அளித்துள்ள நிலையில், அவர்களின் மனு பரிசீலனையில் உள்ளதாகவும், அதில் தகுதியான பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, இத்திட்டத்தில் புதிதாக இணைபவர்களின் பட்டியலை சேர்க்கும் பணி இருப்பதால், தற்போது அதிகாரிகளுக்கு மட்டுமே இந்த ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது வெளிநாட்டு பயணத்தை முடித்தப் பின், இத்திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என தெரிகிறது. மேலும், இத்திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டதை அடுத்து, அந்த தேதியை ஒட்டியவாறு இந்த ஆண்டும் குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : உப்பில்லா பிரதாசம்..!! இந்த கோயிலுக்கு சென்று வேண்டினால் அப்படியே நிறைவேறுமா..? எங்கிருக்கு தெரியுமா..?