”உங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை.. ஆனால், விந்தணு தானம் மூலம் மட்டும் குழந்தையை பெற்றுக் கொள்ளாதீர்கள்” என்று சமூக வலைதளத்தில் ஒரு பெண் கண்ணீர் மல்க பதிவிட்டுள்ளார்.
ரெடிட் சமூக வலைதளத்தில் பெண் ஒருவர், “விந்தணு தானம் பெற்று நானும் எனது கணவரும் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தோம். முதலில் எனது கணவர் குழந்தையை பாசத்துடன் வளர்த்து வந்தார். ஆனால், குழந்தைக்கு 2 வயது ஆனவுடன், எங்கள் மகனை வெறுக்கத் தொடங்கினார். இப்போது தான் நான் உணர்கிறேன். விந்தணு தானம் பெற்று குழந்தை பெற்றது எவ்வளவு மிகப்பெரிய தவறு என்று” என பதிவிட்டுள்ளார்.
அதாவது, திருமணமாகி பல ஆண்டுகளாக தங்களுக்கு குழந்தை இல்லை என்பதால், விந்தணு தானம் மூலம் குழந்தை பெற நானும், என் கணவரும் முடிவு செய்தோம். என் மகன் பிறந்த போது, கணவர் நன்றாக என் குழந்தையை பார்த்துக் கொண்டார். நல்லவராக இருந்தார். இரவில் விழித்திருந்து உணவு கொடுப்பார், முழுமையான தந்தையாக இருந்தார். ஆனால், மகன் 2 வயதை எட்டியது, அவரது நடவடிக்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது.
மகன் முரண்டு பிடிக்க ஆரம்பித்தான். என் கணவரின் குணங்களில் ஒன்று கூட குழந்தையிடம் இல்லாததால் என் கணவர் விரக்தி அடைந்தார். அதாவது விந்தணு தானம் கொடுத்தவரின் குணநலன்கள் அனைத்தும், அந்த குழந்தையிடம் தெரியவந்தது. இப்போது எல்லாம் என் மகனை அவர் கட்டிப்பிடிப்பதில்லை, அவனுடன் விளையாட விரும்புவதில்லை. குழந்தை அருகில் பாசமாக வந்தாலும், தள்ளிவிடுகிறார்.
இதனால் எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இப்போதுதான், நான் செய்தது மிகப் பெரிய தவறு என்பதை உணர்கிறேன். இதிலிருந்து எப்படி மீண்டும் வருவது என்பது எனக்கு தெரியவில்லை” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமானோர் பல கருத்துகளை கூறி வருகின்றனர்.
அதில் ஒருவர், “உங்கள் கணவரை உடனே ஒரு உளவியல் ஆலோசனை பெற வலியுறுத்துங்கள். இல்லையென்றால், குழந்தைக்கு ஆபத்து ஏற்படலாம்” என ஒரு கூறியுள்ளார். மேலும் ஒருவர், “உங்கள் கணவரை மாற்ற முயற்சியுங்கள். இல்லையென்றால், அவரிடம் இருந்து விலகி இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், “குழந்தை இல்லையென்றால், தாராளமாக தத்தெடுத்து வளர்க்கலாம். அதில் பெரிய பிரச்சனை வராது. ஆனால், இன்னொருவரிடம் இருந்து விந்தணு தானம் பெற்று குழந்தை பெற்றால், இதுபோன்ற சிக்கல்கள் வரத்தான் செய்யும்” என கூறியுள்ளார்.