விஜய்யின் தவெக கட்சி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருகிறது. நேற்று மதுரையில் நடைபெற்ற தவெகவின் மாநில மாநாடு பேசு பொருளாக மாறி உள்ளது. தனது முதல் தேர்தலிலியே வெற்றி பெற்று ஆட்சியமைப்போம் என்று விஜய் உறுதியாக கூறுகிறார்.. ஆனால் விஜய் கூறுவது போல் முதல் தேர்தலியே வெற்றி பெற முடியுமா? அதுவும் ஒரு நடிகருக்கு கிடைத்த புகழ், ரசிகர்கள் எல்லாம் ஓட்டாக மாறுமா? நடிகராக இருந்து துணை முதல்வராக மாறி உள்ள பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு அரசியல் வெற்றி அவ்வளவு எளிதில் கிடைத்துவிட்டதா?
பவன் கல்யாண், தனது ஜன சேனா கட்சியுடன் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக தோல்விகளைச் சந்தித்த பிறகு, 2024 தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அவர் ஆந்திராவின் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.. விஜய், பவன் கல்யாண் அரசியல் பயணத்தில் உள்ள ஒற்றுமைகள் மற்றும் சவால்கள் சுவாரஸ்யமானவை.
பவன் கல்யாண் 2014 இல் ஜன சேனா கட்சியை நிறுவினார், ஆனால் முதல் தேர்தலில் போட்டியிடவில்லை.. தெலுங்கு தேசம் – பாஜக கூட்டணியை ஆதரித்தார். 2019 தேர்தலில், அவர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். ஜன சேனா ஒரு இடத்தை மட்டுமே வென்றது. இருப்பினும், பவன் கல்யாண் தனது அரசியல் நிலைப்பாட்டைத் தொடர்ந்தார்.
2024 இல், ஜன சேனா TDP மற்றும் BJP உடன் கூட்டணி அமைத்து 21 சட்டமன்ற இடங்கள் மற்றும் 2 மக்களவை இடங்களுடன் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றி பவன் கல்யாணின் அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது, மேலும் அவர் இப்போது ஆந்திராவின் துணை முதல்வராக உள்ளார்.
இருப்பினும், விஜய் இன்னும் ஒரு தேர்தலில் போட்டியிடவில்லை. 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.. கடந்த ஆண்டு, அக்டோபர் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் தவெகவின் முதல் மாநில மாநாட்டை நடத்தி, தனது கட்சியின் கொடி மற்றும் கொள்கைகளை வெளியிட்டார்.
இந்தக் கூட்டத்தில் சுமார் 3 லட்சம் பேர் கலந்து கொண்டார் என்று கூறப்படுகிறது. திமுக அரசை கடுமையாக விமர்சித்த அவர், தமிழ் தேசியம், சமூக நீதி இரண்டுமே தனது கட்சியின் கொள்கை என்று பிரகடனப்படுத்தினார்..
நேற்று மதுரையில் தவெகவின் மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.. இந்த மாநாட்டிலும் கொள்கை எதிரி பாஜக எனவும், அரசியல் எதிரி திமுக எனவும் விஜய் தெரிவித்தார்.. முதல்வர் ஸ்டாலின் அங்கிள் எனவும், பிரதமர் மோடியை மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் எனவும் விமர்சித்தார்.. சினிமாக்காரன் என்று தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் விஜய் பதிலடி கொடுத்தார்.. எல்லா சினிமாக்காரனும் முட்டாளும் இல்லை.. எல்லா அரசியல்வாதியும் அறிவாளியும் இல்லை என்றும் கூறினார்.. மேலும் தனக்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறும், திமுக அரசுக்கு வேட்டாக மாறி, கோட்டைக்கு செல்லும் ரூட்டாகவும் மாறும் என்றும் ரைம்மிங்கில் பேசினார்..
மேலும் எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசிய அவர் அதிமுகவுக்கு சரியான தலைமை இல்லை என்பதை மறைமுகமாக கூறினார்.. அதிமுக தொண்டர்கள் தவெகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் பேசியிருந்தார்.. இதன் மூலம் அதிமுக ஒரு பொருட்டே இல்லை என்பதையும் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டி என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இருப்பினும், தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுக போன்ற வலுவான திராவிடக் கட்சிகளிடையே ஒரு இடத்தைக் கண்டுபிடிப்பது விஜய்க்கு ஒரு பெரிய சவாலாகவே உள்ளது. விஜய் யாருடைய வாக்குகளை பிரிக்கப் போகிறார் என்பது கேள்வியாக இருந்தது..
தமிழ்நாட்டில் தற்போது திமுக ஆட்சியில் உள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு மீது பெரியளவில் எந்த அதிருப்தியும் இல்லை.. மகளிர் திட்டங்கள் மற்றும் சமூக நீதி போன்ற விஷயங்களில் திமுக வலுவாக உள்ளது.. அதிமுக எதிர்க்கட்சியில் இருந்தாலும், வலிமையான தலைவர் இல்லாததால் விஜய் திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்க வாய்ப்புள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்… அது நடந்தால்.. அரசுக்கு எதிரான வாக்குகள் பிரிந்து.. திமுகவுடன் இணையலாம். மேலும்.. திமுக மற்றும் அதிமுகவுடன் ஒப்பிடும்போது தவெகவுக்கு வலுவான தொண்டர்கள் மற்றும் அரசியல் அனுபவம் இல்லாதது ஒரு பெரிய குறையாக உள்ளது.. தவெக தொண்டர்களின் செயல்பாடும் இதனை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.. சினிமா நடிகரின் ரசிகர்கள் என்ற மனநிலையில் தான் தவெக தொண்டர்கள் உள்ளனர்.. ஓடும் வாகனம் மீறி ஏறுவது, மரத்தில் இருந்து குதிப்பது என பக்குவமின்றி செயல்பட்டு வருகின்றனர்.. இப்படிப்பட்ட தொண்டர்களை வைத்து எப்படி தேர்தலை எதிர்கொள்ள போகிறார் என்பதே கேள்விக்குறி..!
சரி.. பவன் கல்யாண் மற்றும் விஜய் இருவரின் அரசியல் சித்தாந்தங்களிலும் சில ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் இளைஞர்கள் சமூக நீதி மற்றும் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தினர். ஆட்சிக்கு எதிரான வாக்குகளைப் பயன்படுத்தி பவன் தெலுங்கு தேசம் மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றார். 2026-ல் விஜய்யும் இதேபோன்ற உத்தியைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்,
இல்லையெனில் தனியாகப் போட்டியிடுவது கடினமாகிவிடும். தமிழ்நாட்டில் வலுவான திராவிட சித்தாந்தமும் வலுவான கூட்டணிகளின் தேவையும் விஜய்க்கு பெரிய சவால்கள். ஏனெனில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது. ஆனால் அவரது சமீபத்திய பேச்சு, அவர் தனியாக போட்டியிடுவார் என்றே தெரிகிறது.. இது வாக்குகளைப் பிரிப்பதற்கான சவாலை ஏற்படுத்தக்கூடும்.
விஜய்க்கு மற்றொரு சவால் திரைப்பட ரசிகர்களை வாக்காளர்களாக மாற்றுவது. இந்த விஷயத்தில் பவன் கல்யாண் பின்னடைவுகளைச் சந்தித்தார். 2009-ல் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சிக்கு மிகப்பெரிய கூட்டம் இருந்த போதிலும், அது 18 இடங்களை மட்டுமே வென்றது. ரசிகர்கள் வாக்காளர்களாக மாறாதது ஒரு முக்கிய காரணம்.
பவன் கல்யாண் ஆரம்பத்தில் படுதோல்வி அடைந்ததற்குக் காரணம், அவரது ரசிகர்கள் பலருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லாததாலும், அவர்கள் பவனை ஒரு திரைப்பட நட்சத்திரமாகப் பார்த்ததாலும் தான்.
2024 வாக்கில் நிலைமை மாறியது. ரசிகர்கள் அவரை ஒரு முழுமையான தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அவர் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை அவர்களிடமிருந்து வந்தது. அது ஜன சேனாவுக்கு ஒரு உறுதியான அடித்தளமாக மாறியது. கிராமப்புற பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்களை ஈர்க்க திமுக வலுவான திட்டங்களை செயல்படுத்தி வருவதால், விஜய்யும் அத்தகைய சவாலை எதிர்கொள்ள வேண்டி உள்ளது..
எனவே 2026 தமிழகத் தேர்தலில் விஜய் வெற்றி பெற, அவருக்கு வலுவான நிறுவன அமைப்பு மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்களின் ஆதரவு தேவை. பவன் கல்யாண் பொறுமையுடனும் சரியான கூட்டணி உத்தியுடனும் தனது அரசியல் பயணத்தில் வெற்றி பெற்றார். விஜய்யும் இதே போன்ற மூலோபாய கூட்டணிகள் மற்றும் தெளிவான நிகழ்ச்சி நிரலுடன் முன்னேற வேண்டும். திமுக மற்றும் அதிமுகவின் வலுவான திராவிட கட்சிகளுடன் போட்டியிட, சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளில் விஜய்க்கு தெளிவான கவனம் செலுத்த வேண்டும் மற்றும் ஒரு வலுவான அரசியல் செய்தி தேவை.
இறுதியாக, பவன் கல்யாண் மற்றும் விஜய் இருவரின் அரசியல் பயணங்களும், திரைப்பட நட்சத்திரங்கள் அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல என்பதை நிரூபிக்கின்றன. பவன் கல்யாண் அதற்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடினமாக உழைத்து, சரியான நேரத்தில் ஒரு கூட்டணி உத்தியுடன் வெற்றியைப் பெற்றார். இப்போது அவரது பயணம் சற்று சிறப்பாக உள்ளது. இருப்பினும், இது முற்றிலும் சவால்கள் இல்லாமல் இல்லை. ஜனசேனா இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.
விஜய் தனது திரைப்பட பிரபலத்தை ஒரு அரசியல் சக்தியாக மாற்ற வேண்டுமானால், அவருக்கு ஒரு நீண்டகால உத்தி, உள்ளூர் பிரச்சினைகளில் கவனம் செலுத்துதல் மற்றும் ஒரு வலுவான கட்சி கட்டமைப்பு தேவை.. 2026 தேர்தல் விஜய்க்கு ஒரு முக்கிய சோதனையாக இருக்கும். முதல் தேர்தலிலேயே ஆட்சி அமைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.. ஆனால் விஜய் இந்த தேர்தலில் எத்தனை சதவீதம் வாக்குகளை பெறப் போகிறாரா? அவர் கூறுவது போல, அவருக்கு வரும் கூட்டம் அனைத்தும் வாக்குகளாக மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..



