பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ, தங்களது கோரிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படாததை கண்டித்து, அடுத்த ஆண்டு (2026) ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஜாக்டோ – ஜியோ அமைப்பு தனது கோரிக்கைகளுக்காக எப்போதெல்லாம் போராட்டம் நடத்துகிறதோ, அப்போதெல்லாம் அரசு அவர்களை அழைத்துத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி அமைச்சர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, மார்ச் 13ஆம் தேதி முதலமைச்சரே ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். இந்தக் கூட்டத்தில், 10 அம்சக் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளித்தார்.
ஆனாலும், அரசுத் தரப்பில் இருந்து உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால், அரசின் கவனத்தை மீண்டும் ஈர்க்கும் வகையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 18-ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
முக்கிய 10 அம்சக் கோரிக்கைகள் :
* பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்துதல்.
* தொகுப்பூதியம் (Consolidated Pay), மதிப்பூதியம் (Honorarium), சிறப்பு காலமுறை ஊதியம் (Special Time Scale Pay) பெறும் ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் வரன்முறைப்படுத்துதல்.
* ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள் மற்றும் ஊதிய முரண்பாடுகளைக் களைதல்.
* அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல்.
அடுத்தகட்ட போராட்ட திட்டங்கள் :
இந்தச் சூழலில், அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்காக, ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், இறுதிக்கட்டப் போராட்டத்திற்கு ஆயத்தமாகும் வகையில், தொடர்ச்சியான போராட்ட அட்டவணையை ஜாக்டோ-ஜியோ வெளியிட்டுள்ளது:
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வட்டார அளவில் பிரசார இயக்கம் மேற்கொள்ளப்படும். அடுத்த மாதம் டிசம்பர் 13-ஆம் தேதி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உரிமை மீட்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, டிசம்பர் 27-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடைபெறும்.
பின்னர், அடுத்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிடப்பட்டிருப்பதாக ஜாக்டோ-ஜியோ சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் முக்கிய துறைகள் மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதால், அரசு இந்தப் பிரச்சனையில் விரைவில் ஒரு தீர்வைக் காணும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



