சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பெண் ஒருவர் காட்டுப் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த பாண்டிக்குமார் என்பவரின் மனைவி மகேஸ்வரி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மகேஸ்வரிக்கு நிலம் வாங்கி விற்பதில் அதிக ஆர்வம் இருந்ததால், அவர் தெரிந்தவர்களுடன் அதிக அளவில் பணம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்துள்ளார். இந்த சூழலில், கடந்த நவம்பர் 6ஆம் தேதி காட்டுப் பகுதியில் அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக மகேஸ்வரியின் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்த சசிக்குமார் என்பவரை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்தனர். நிலத் தொழில் செய்து வந்த மகேஸ்வரிக்கு ஒரு முறை பணத் தேவை ஏற்பட்டபோது, ஓட்டுநர் சசிக்குமார் தனக்கு தெரிந்த நபரிடம் இருந்து பெரிய தொகையைப் பெற்று மகேஸ்வரிக்கு கொடுத்துள்ளார். ஆனால், வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் மகேஸ்வரி காலந்தாழ்த்தி வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று மகேஸ்வரியை சசிக்குமார் காரில் அழைத்துச் சென்ற நிலையில், இருவருக்கும் இடையே பணத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக காரில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தின் உச்சியில் இருந்த சசிக்குமார், காரை நிறுத்திவிட்டு, கீழே கிடந்த கல்லை எடுத்து மகேஸ்வரியின் முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்துக்கொண்டு அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த கொலை விவகாரம் தொடர்பாக சசிக்குமாரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்த சில நகைகளை மீட்டனர். மீதமுள்ள நகைகளைக் கடையில் அடகு வைத்திருப்பதாகச் சசிக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், சசிக்குமாரை தவிர வேறு யாருக்கேனும் இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : உங்கள் வீட்டில் ஏசி இருக்கா..? குளிர்காலத்தில் ஹீட்டராக கூட மாற்றலாம்..!! இந்த டிப்ஸை தெரிஞ்சிக்கோங்க..!!



