வயது வந்த பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த உரிமையை உணர்த்தும் விதமாக சமீபத்தில் ஒரு நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் 18 வயதைக் கடந்த ஒரு இளம்பெண், ஏற்கனவே திருமணமாகி இருந்த ஆணுடன் சென்றுவிட்டதாக அவரது பெற்றோர் அளித்த புகார் அளிக்கப்பட்டது. மேலும், அந்த இளம்பெண்ணை மீட்டு வர காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதுல் ஸ்ரீதரன் மற்றும் பிரதீப் மிட்டல் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை செய்தது.
இந்த வழக்கின் விசாரணையில், அந்த பெண் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, எந்தவிதக் கட்டாயமும் இல்லாமல், தன்னுடைய விருப்பப்படி அந்த ஆணுடன் வாழ விரும்புவதாகவும், பெற்றோருடன் திரும்பிச் செல்ல முடியாது என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, நீதிமன்றம் முக்கியமான கட்டாயங்கள் மற்றும் உரிமைகளை சுட்டிக்காட்டியது.
வயது வந்த ஒருவர், தனக்குத் திருப்தியாக இருக்கும் வகையில் யாருடன் வாழ வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முழு உரிமை அவருக்கு உண்டு. திருமணமான ஆணுடன் வாழ்வதைத் தடுக்கும் விதமாக தனிப்பட்ட சட்டம் எதுவும் இல்லை. அவ்வாறு வாழ்வதால் உருவாகும் சட்ட சிக்கல்கள் இருந்தால், அதில் சட்டப்படி முதன்மை உரிமை அந்த ஆணின் முதல் மனைவிக்கே உண்டு” என்று உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
அந்த பெண் தன்னிச்சையாக அந்த ஆணுடன் வாழ விரும்புவதாக உறுதிமொழி அளித்ததை அடுத்து, காவல்துறையிடம் அவரின் விருப்பத்திற்கேற்ப நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவருடன் வாழ விரும்பும் ஆணிடமிருந்து, அந்தப் பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உறுதிமொழியும் பெறப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
Read More : வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாடுபவரா நீங்கள்..? இப்படி வழிபட்டால் முழு அருளும் கிடைக்கும்..!!