சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று (Urinary Tract Infection – UTI) என்பது பெண்களிடையே பரவலாக காணப்படும் ஒரு சுகாதாரப் பிரச்சனையாகும். ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு சிறுநீர் குழாய் சிறியதாக இருப்பதால், பாக்டீரியா தொற்றுகள் மிக விரைவாகச் சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகத்தை அடைந்து தீவிர பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பொதுவாக நீர்ச்சத்து குறைபாடு அல்லது தனிநபர் சுகாதாரக் குறைபாடு ஆகியவை UTI-க்குக் காரணங்களாகக் கூறப்படும் நிலையில், சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
சமைத்த உணவுகளில் மறைந்திருக்கும் ஆபத்து :
கடந்த அக்டோபர் 23ஆம் தேதியன்று, அமெரிக்கன் சொசைட்டி ஃபார் மைக்ரோபயாலஜி மருத்துவ இதழில் (American Society for Microbiology) வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்றில், நாம் அன்றாடம் வீட்டில் சமைத்துச் சாப்பிடும் உணவுகள் வழியாக கூட சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் நீர்ச்சத்து இழப்பை தாண்டி, வேறு என்னென்ன காரணிகள் UTI-க்கு காரணமாக இருக்கின்றன என்பதைக் கண்டறியும் நோக்கிலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏனெனில், UTI-க்குக் காரணமான பாக்டீரியாக்கள் பெரும்பாலும் குடலோடு தொடர்புடையவையாக இருந்து, பிறகு சிறுநீர்க் குழாயில் நுழைகின்றன.
கோழிக்கறி மூலம் அதிகம் பரவும் அபாயம் :
இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட விவரங்கள் முக்கியமானவை. சுமார் 18 சதவீத UTI-கள் இறைச்சி உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, இதில் கோழிக்கறி மூலமாக 36 முதல் 38 சதவீதம் வரை பாக்டீரியா பரிமாற்றம் நடைபெறுவதாகத் தெரியவந்துள்ளது. உணவு மூலமாகக் பரவும் பாக்டீரியாக்கள் காரணமாக UTI ஏற்படுவதற்கு 60% அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் இந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நாம் இறைச்சிகளை எப்படிச் சமைக்கிறோம், அவற்றை எவ்வாறு கையாளுகிறோம் என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
சமையலறையில் தேவை கூடுதல் கவனம் :
சமையலறை என்பது உணவுகளை கையாள்வதற்கான இடம் என்பதால், சமைக்கும்போது நாம் சிறிது அலட்சியமாக இருந்தால், பாக்டீரியாக்கள் எதிர்பாராத வழிகளில் எளிதாகப் பரவ அதிக வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு, E.கோலை (E. coli) போன்ற பாக்டீரியாக்களைக் கொண்ட சமைக்கப்படாத இறைச்சிகளை, முறையான பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துடன் கையாளாவிட்டால் தொற்று அபாயம் அதிகமாகிறது.
உணவைச் சரியாக கழுவாமல் இருப்பது, அல்லது இறைச்சிகளை நறுக்கிய அதே கட்டிங் போர்டில் மீண்டும் காய்கறிகளைச் சுத்தம் செய்யாமல் நறுக்குவது போன்ற செயல்கள் மூலம் பாக்டீரியாக்கள் மிக எளிதாகப் பிற உணவுகளுக்கு மாற்றமாகி, அதன் வழியாக நம் உடலுக்குள் நுழைந்து சிறுநீர்ப்பாதை தொற்றை ஏற்படுத்தலாம். எனவே, தனிநபர் சுகாதாரப் பழக்கங்களைப் போலவே, உணவைக் கையாளும் முறையும் சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று ஏற்படுவதை தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
Read More : அக்காள் கணவரை நினைத்து ஏங்கிப் போன தங்கை..!! கொழுந்தியாளுடன் ஓட்டம் பிடித்த மாமா..!! கோவையில் ஷாக்



