நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த குமாரபாளையம் பகுதியில் சொத்து தகராறில் பெண்கள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பழனியப்பன் என்பவர் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தனது அக்கா கந்தாயி என்பவருக்கு பத்திரம் மூலம் எதுவும் எழுதித் தரமால், வாய்மொழி உறுதியாக வீட்டின் இடத்தை கொடுத்துள்ளார்.
இதற்கிடையே, கந்தாயி இறந்த நிலையில், அவரது மகள் ராணி தங்களுக்கான சொத்தை கொடுக்குமாறு கூறியுள்ளார். மேலும், ராணி தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர். இதுதொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், வீட்டின் உரிமையாளர் வீட்டின் மேற்கூரையை பராமரிப்பதற்காக சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ராணியின் ஆதரவாளர்கள் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இது கைகலப்பாகவும் மாறியது.
தொடர்ந்து, ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். மேலும், இரு பெண்கள் மாறி மாறி தலைமுடியை பிடித்துக் கொண்டு, தரதரவென இழுத்துச் சென்று கொடூரமாக தாக்கிக் கொண்டனர். தற்போது இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.