தற்போதைய இளைய தலைமுறை பெண்கள், காலில் கருப்பு கயிறு அணிவது பரவலாக இருந்து வருகிறது. ஆனால், இது அழகுக்கான அலங்காரமல்ல. இதன் பின்னால் பழமையான மரபுகள், நம்பிக்கைகள் மற்றும் ஆன்மீக காரணங்கள் உள்ளன. பண்டைய தமிழ் சமூகத்தில், ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களின் உடலைத் தீய ஆற்றல்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்தக் கருப்பு கயிறை அணிந்தனர்.
மரபின்படி, பெண்கள் இடது காலிலும், ஆண்கள் வலது காலிலும் கருப்பு கயிறை கட்டுவது வழக்கமாக இருந்து வந்தது. இதற்கு முதன்மையான காரணம் திருஷ்டி மற்றும் தீய சக்திகளைக் கழித்தல். இதேபோல, வீடு, தொழில், உடல்நிலை போன்றவை பாதிக்கப்பட்டிருந்தால், பலர் பாதுகாப்பு கருதிச் காலில் கருப்பு கயிறு கட்டுவார்கள்.
மேலும், யானையின் முடியை வைத்து செய்யப்பட்ட மோதிரங்களும் இதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. “கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” எனும் பழமொழியும், மக்கள் திருஷ்டி தாக்கத்தை எவ்வளவு முக்கியமாகக் கவனித்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
இதை அறிவியல் நோக்கில் பார்ப்பவர்களும் சிலர் உள்ளனர். கருப்பு நிறம் சூரிய ஒளிக்கதிர்களை உறிஞ்சும் தன்மை கொண்டது என்பதால், உடலின் வெப்ப நிலையை சமநிலைப்படுத்தி, சக்தி ஓட்டத்தை சீராக்கும் என்பது ஒரு நோக்கம். குறிப்பாக கணுக்கால் பகுதிக்கு அருகில் கட்டும் கயிறு, நரம்பு இயக்கத்தையும் மன அழுத்தத்தையும் சீராக வைத்திருக்க உதவலாம் என்று சிலர் கூறுகிறார்கள். இதன் மூலம் உடல் மற்றும் மனநலத்தில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில், சனி தோஷம் அல்லது ராகு-கேது போன்ற கிரகங்கள் தரும் பாதிப்புகளில் இருந்து தற்காப்பு பெறவும், கருப்பு கயிறு அணிவது பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக சனிக்கிழமையோ அல்லது செவ்வாய்க்கிழமையோ, ஒன்பது முடிச்சுகளுடன் கூடிய கயிறை சனி பகவானை வணங்கி அணிவது நிதிநிலை மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உதவும் என்றும் கூறப்படுகிறது. எதிர்பாராத திடீர் ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பும் இதன்மூலம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.