முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின்’ கீழ் புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வண்ணம், கடந்த 2023 செப்டம்பர் 15-ஆம் தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்ததாகவும், இது மகளிரின் பொருளாதார விடுதலைக்கு துணை நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 26 மாதங்களில், ஒவ்வொரு பயனாளிக்கும் சுமார் 26 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 30 ஆயிரம் கோடி ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டிருப்பதாக துணை முதல்வர் தெரிவித்தார். மேலும், கூடுதலாக பல பெண்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக, அரசு மானியத்தில் 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்கள் மற்றும் முதியோர் உதவித்தொகை பெறும் குடும்பங்களில் விதிகளைப் பூர்த்தி செய்யும் மகளிருக்கும் உரிமைத் தொகை சேர்த்து வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்து விதிகளைத் தளர்த்திக் கொடுத்தார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், ஜூன் 19ஆம் தேதி தொடங்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழும் விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். நவம்பர் 15-ஆம் தேதி வரை 10 ஆயிரம் முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை 9,055 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் மூலம் இதுவரை உரிமைத் தொகை கேட்டு 28 லட்சம் பெண்கள் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர்.
புதிதாகப் பெறப்பட்டுள்ள இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் வருவாய்த் துறை மூலம் நேரடி ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இந்தப் பணிகள் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே, முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியான பெண்களுக்கு வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க முதல்வர் முடிவெடுத்திருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
Read More : செல்வ செழிப்பாக வாழ வேண்டுமா..? இந்த நாளில் மகாலட்சுமியையும், குபேரனையும் வழிபடுங்கள்..!!



