தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மகத்தான திட்டங்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமும் ஒன்று. இத்திட்டம், கோடிக்கணக்கான பெண்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது. இத்திட்டத்தில் ஏற்கனவே 1.15 கோடி பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில், விடுபட்ட தகுதியான பெண்களையும் இத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற சிறப்பு முகாம்கள் மூலம் புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களில் சுமார் 40% மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, புதிய பயனாளிகளை சேர்க்கும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள், ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் என பலரும் இந்த முகாம்கள் மூலம் தற்போது விண்ணப்பித்து வருகின்றனர்.
சில பயனாளிகளுக்கு, வங்கிக் கணக்குடன் ஆதார் எண் சரியாக இணைக்கப்படாதது அல்லது கணக்குகள் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருப்பது போன்ற காரணங்களால், உரிமைத் தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த சிக்கல்களை தீர்க்க அரசு ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளது. அதாவது, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ஒரு ரூபாய் மட்டும் அனுப்பி, அந்தப் பணம் சரியாக வரவு வைக்கப்படுகிறதா என்று சோதிக்கப்படுகிறது.
இதன் மூலம், எந்தெந்த வங்கிக் கணக்குகளில் பிரச்சனை உள்ளது என்பதை கண்டறிந்து, அதை விரைந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உங்கள் வங்கிக் கணக்கிற்கு திடீரென ஒரு ரூபாய் வரவு வைக்கப்பட்டால், அது இந்த சரிபார்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதிதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.



