கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி ரூ.1000 பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம் தொடங்கியது.
தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக தமிழகத்தில் விடுபட்ட குடும்ப தலைவிகள் அனைவரும் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து வருகிறார்கள். குடும்ப தலைவி மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டியது இல்லை என்றும், ஒரு குடும்பத்தில் தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த குடும்பத்தில் இருக்கும் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இதனிடையே மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு டிசம்பர் 15 முதல் 1000 ரூபாய் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி அண்மையில் அறிவித்திருந்தார். தற்போது கிராம வாரியாக பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் விவரங்களை கிராம நிர்வாக அலுவலர்கள் இறுதி செய்ய தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ராணிப் பேட்டையில் அரசு நலத் திட்ட உதவிகளை தொடங்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டோருக்கு டிசம்பர் மாதம் முதல் உரிமைத் தொகை கண்டிப்பாக வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இது விண்ணப்பதாரர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.



