கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் கடந்த ஒரு மாதமாக பரிசீலனையில் உள்ளன. “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களும் படிப்படியாக ஆய்வு செய்யப்படுகின்றன. அரசு வெளியிட்ட தகவலின்படி, விண்ணப்பித்தவர்கள் தங்கள் மனுவின் நிலையை https://kmut.tn.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம்.
இதன் மூலம் விண்ணப்பத்தின் தகுதி நிலை மற்றும் மறுப்பு காரணம் போன்ற விவரங்களையும் அறியலாம். “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் மொத்தம் 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், மகளிர் உரிமைத் திட்ட நிதியுதவிக்காக 5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அனைத்து மனுக்களும் பதிவுசெய்யப்பட்டு, உரிய அதிகாரிகள் மூலம் பரிசீலிக்கப்படுகின்றன.
அடுத்த 45 நாட்களுக்குள் மனுக்களுக்கு தீர்வு வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட விதிகளின்படி, அரசு ஊழியர்கள், நேரடி அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், குறிப்பிட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி ஊழியர்கள் திட்டத்திற்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அறிவுசார் மாற்றுத்திறன், கடுமையான மாற்றுத்திறன், முதுகுத்தண்டுவடம்/மூளை நோய், பார்க்கின்சன், தசைச்சிதைவு நோய், தொழுநோய் காரணமாக பராமரிப்பு உதவித்தொகை பெறும் குடும்பங்கள், மற்றும் சில ஓய்வூதியத் திட்டங்களைப் பெறாத தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என கூறப்பட்டுள்ளது.
மேலும், 29 மாவட்டங்களில் உள்ள 106 முகாம்களில் வசிக்கும் 19,487 இலங்கைத் தமிழர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் திட்டத்தின் இரண்டாம் கட்ட முகாம்களை நடத்துவது குறித்து 19 ஜூன் 2025 அன்று தலைமைச் செயலர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், ஏற்கெனவே உள்ள விதிவிலக்குகளுடன் கூடுதல் சலுகைகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Read more: இபி மீட்டர் மாறுது.. தமிழ்நாட்டில் மாதாந்திர மின் கட்டண முறை மீண்டும் அமல்..? அரசின் மாஸ்டர் பிளான்