தமிழ்நாட்டில் விவசாயிகள் மத்தியில் சிறுநீரகப் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து பிரபல பிரிட்டிஷ் மருத்துவ இதழான ‘தி லான்செட்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை, சுகாதாரத் துறை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயத் தொழிலாளர்கள் நேரடியாக வெயிலில் வேலை செய்வதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து, சிறுநீரகச் செயல்பாடு பாதிக்கப்படலாம் என்பது தெரியவந்துள்ளது.
2023 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், மாநில உறுப்பு மாற்று ஆணையச் செயலர் என். கோபாலகிருஷ்ணன் தலைமையிலான சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறைக் குழுவினர், 125 கிராமங்களில் 3,350 விவசாயத் தொழிலாளர்களிடம் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், 5.13 விழுக்காடு விவசாயிகளின் சிறுநீரகச் செயல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமானோருக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் அல்லது மரபணுக் கோளாறுகள் போன்ற வேறு எந்த இணை நோய்களும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
மருத்துவர்களின் எச்சரிக்கை :
வெப்பமான சூழலில் அதிக நேரம் வேலை செய்யும் விவசாயிகள், பூச்சி மருந்து தெளிப்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் போன்றோரின் உடலில் நீர்ச்சத்து வேகமாக இழக்கப்படுவதால், சிறுநீரகம் விரைவில் செயலிழக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஆரம்பத்தில் எவ்வித அறிகுறிகளும் தெரியாததால், பாதிப்பு முற்றிய பின்னரே கண்டறியப்படுகிறது.
தற்காப்பு நடவடிக்கை :
எனவே, தினமும் வெயிலில் வேலை செய்பவர்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வதே இதில் இருந்து தற்காத்துக் கொள்ள ஒரே வழியாகும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அத்துடன், சிறுசிறு உடல்நலக் குறைபாடுகளுக்கும் அலட்சியம் காட்டாமல், யூரியா, கிரியேட்டினின் போன்ற சோதனைகளை மேற்கொள்வதன் மூலம் சிறுநீரகப் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
Read More : விநாயகரை வழிபடும்போது தோப்புக்கரணம், தலையில் குட்டு வைக்க என்ன காரணம்..? ஆன்மீகமும், அறிவியலும்..!!



