கனவில் ஆட்டை வெட்டுவதாக நினைத்து தூங்கிக் கொண்டிருக்கும் போது தனது ஆணுறுப்பையே ஒருவர் வெட்டிக் கொண்ட விபரீத சம்பவம் கானா நாட்டில் அரங்கேறியுள்ளது.
மேற்கு ஆப்ரிக்காவின் கானா நாட்டின் மத்திய மாகாணமாக இருக்கக் கூடிய அஸ்ஸின் ஃபோசு என்ற பகுதியைச் சேர்ந்தவர் கொஃபி அட்டா (47). இவர்தான் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கனவில் ஆட்டை வெட்டுவதாக நினைத்து தனது ஆணுறுப்பை வெட்டிக் கொண்டார். இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நடந்துள்ளது. இது தொடர்பாக கொஃபியின் மனைவி அட்வோ கொனாடு, “நான் வெளியே சென்றிருந்த நேரத்தில்தான் இப்படி நடந்துள்ளது. பக்கத்து வீட்டுக்காரரால்தான் என்னால் சம்பவம் குறித்து அறிய முடிந்தது. வீட்டுக்கு வந்து பார்த்ததும் என் கணவரின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தமாக கொட்டிக் கொண்டிருந்தது. உடனடியாக ரத்தப் போக்கை நிறுத்துவதற்காக டையப்பர் அணிவித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள கொஃபி, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எனக்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ”சேரில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது சமைப்பதற்காக ஆட்டை வெட்டுவது போல கனவு வந்தது. தூங்கிக் கொண்டிருந்த போது எப்படி என் கையில் கத்தி வந்தது என்று தெரியவில்லை. அதுதான் குழப்பமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள மருத்துவர்கள், ”கொஃபியின் பிறப்புறப்பு மீண்டும் இணைக்கப்பட்டிருக்கிறது என்றும் அறுவை சிகிச்சை முடிந்து 6 வாரங்களுக்கு பிறகு அவரால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்” எனக் கூறியிருக்கின்றனர்.