பயணிகளுக்கு பணத்தை திருப்பி தருவதில் கால தாமதம் செய்ததாக ஏர் இந்திய விமான நிறுவனத்திற்கு அமெரிக்க போக்குவரத்து துறை 1.4 மில்லியன் டாலர் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
விமான டிக்கெட்டுகளை ரத்து செய்தபின்னர் குறிப்பிட்ட பயணிகளுக்கோ, பயணங்களில் ஏதாவது குறிப்பிட்ட மாற்றங்கள் செய்த பயணிகளுக்கு தொகையை திருப்பி தருவதில் ஏர் இந்தியா நிறுவனம் அதிக காலம் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது. பெரும்பாலும் கொரோனா பெருந்தொற்றின் போது இது ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பயணிகளுக்கு திரும்ப செலுத்த வேண்டிய தொகை 121.5 மில்லியன் டாலர் தொகை செலுத்தவும் கால தாமதத்திற்கான அபராதமாக 1.4 மில்லியன் டாலர் செலுத்தவும் அமெரிக்க போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மொத்தம் 600 மில்லியன் அமெரிக்க டாலர்களை திருப்பிச் செலுத்த ஒப்புக்கொண்ட 6 விமான நிறுவனங்களில் ஏர் இந்தியாவும் ஒன்று என்று அமெரிக்க போக்குவரத்துத் துறை திங்களன்று தெரிவித்தது. ஏர் இந்தியாவின் ’’ கோரிக்கையின் பேரில் பணத்தைத் திரும்பப் பெறுதல்’’ என்ற கொள்கையின் படி விமான டிக்கெட்டுகளை ரத்து செய்தாலோ பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணம் திரும்ப செலுத்துவதில் 1900க்கும்மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. இதை செயல்படுத்த ஏர் இந்தியா 100 நாட்களுக்கு மேல் எடுத்தது. ஏர் இந்தியா இதுபற்றிய தகவலை முழுமையாக தரவில்லை என்று தெரிவித்துள்ளது. எனவே தனது பயணிகளுக்கு 121.5 மில்லியன் டாலர்கள் திருப்பி செலுத்தவும் அபராதமாக 1.4 மில்லியன் டாலர் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.