18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களுக்கு ஆணுறை இலவசம் என பிரான்ஸ் அதிபர் அறிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான். இவர் அந்நாட்டு இளைஞர்கள் சுகாதார நலனை கருத்தில் கொண்டு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”18 முதல் 25 வயதுடைய அனைத்து இளைஞர்களுக்கும் அரசு மருந்தகங்கள் மூலம் இலவச ஆணுறைகளை வழங்கும். இது உண்மையில் தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க ஒரு சிறிய புரட்சி. இந்த ஆண்டு முதல் 25 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களுக்கும் இலவச கருத்தடை மருந்துகள் மற்றும் சாதனங்களை வழங்கும் திட்டத்தை பிரான்ஸ் அரசு மேற்கொண்டுள்ளது. உண்மையில் பல இளம்பெண்கள் திட்டமிடப்படாத கர்ப்பத்தால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், என்ன செய்வது அல்லது அதிலிருந்து எப்படி வெளியேறுவது என்று அவர்களுக்குப் புரியவில்லை.
மேலும், சில பெண்கள் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் கருக்கலைப்பு செய்ய நினைக்கின்றனர். ஆனால், அதன் முறைகள் அல்லது சிகிச்சைகளை பற்றி அவர்களுக்குத் தெரிவதில்லை” எனத் தெரிவித்துள்ளார். இந்நாட்டில் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.