மனிதர்கள் மது, போதை போன்ற பழக்கத்திற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டார்கள் என்பது அறிந்த ஒன்றுதான். ஆனால், லண்டனைச் சேர்ந்த இந்த நபர் தன்னுடைய போதை பழக்கத்தை தொடர, தனது சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு தெருக்களிலும், ரயில் நிலையங்களிலும் தங்கி வருகிறார்.
டோம் (Dom) என்ற அந்த நபர் தனது வீட்டை வாடகை விட்டதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து போதை பொருள் வாங்கி வருகிறார். இதுகுறித்து The Taboo Room என்ற யூடியூப் சேனலிடம் பேசியுள்ள டோம், தான் ஒரு வீடற்றவர் என தெரிவித்துள்ளார். 1300 பவுண்ட்-க்கு வீட்டை வாடைக்கு விட்டு வருகிறேன். (இது நம்மூரு பணத்தின் மதிப்பில் 1 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்). இதுபோக தினமும் ரயில், பேருந்து நிலையங்களிலும் தெருக்களிலும் பிச்சை எடுப்பதன் மூலம் அவருக்கு 200-300 பவுண்ட் வேறு கிடைக்கிறதாம். அதாவது சுமார் 20-இல் இருந்து 30 ஆயிரம் வரை தினசரி பிச்சையெடுத்தே சம்பாதிக்கிறார்.
இரவு தங்குவதற்கு காசு வேண்டும் என பிச்சையாக கேட்டு, போதுமான பணம் கிடைத்ததும் போதைக்கு செலவழித்துவிட்டு மீண்டும் ரோட்டிலேயே தங்குவதுதான் டோமின் அன்றாட வேலையாம். தன்னுடைய இளமை பருவத்தில் போதைப் பழக்கத்துக்கு அடிமையான இவர், காலப்போக்கில் அதிலிருந்து விடுபடவும் முயற்சித்திருக்கிறார். ஆனால், அதற்காக மறுவாழ்வு மையத்துக்கும் சென்றும் எந்த பயனும் இல்லை என்று கூறியிருக்கிறார். இவருடைய வீடு பற்றி கேட்டபோது, டோமின் காதலி கர்ப்பமாக இருந்ததை அறிந்த அவரது தந்தை அந்த வீட்டை டோம் பெயருக்கு மாற்றி எழுதியிருக்கிறார். ஏனெனில் தனது மகனின் குடும்பம் வீடு இல்லாமல் கஷ்டப்பட கூடாது என எண்ணி டோமின் தந்தை அப்படி செய்திருக்கிறார். ஆனால், தற்போது டோமிற்கென எந்த சொந்த பந்தமும் இருக்கவில்லை. போதைப் பழக்கத்தோடு தேங்கிவிடாமல் சாதாரண வாழ்க்கை வாழ விரும்புவதாகவும் டோம் தெரிவித்திருக்கிறார்.
டோமின் அந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள், “இது பைத்தியக்காரத்தனம்” என்றும், “மிகவும் பரிதாபமாக இருக்கிறது” என்றும், “உங்களுக்கு தெளிவான திசையை காட்டக் கூடியவரின் உதவி தேவை” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.