எரிபொருள் நிரப்புவதற்காக வாகனத்தை நிறுத்திய இடத்தில் பெண் ஒருவர் தற்செயலாக லாட்டரி வாங்கியுள்ளார். இதில், அவர் வாங்கிய லாட்டரிக்கு ரூ.8 கோடி பரிசு கிடைத்துள்ளதால் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில், பெண் ஒருவர் ஒரே நாளில் 1 மில்லியன் டாலருக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். தற்செயலாக அவர் வாங்கிய லாட்டரிக்கு 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடி) லாட்டரியில் பரிசாக கிடைத்துள்ளது. பரிசு விழுந்த இந்த லாட்டரியை அந்த அதிர்ஷ்டசாலி வாங்கிய கதைதான் பலரையும் வியப்படைய செய்துள்ளது.
அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் உள்ள வின்ஸ்டன்-சேலம் என்ற நகரத்தை சேர்ந்தவர் லவுரா கீன். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிஃப்ட் பொருட்கள் வாங்குவதற்காக லவுரா கீன் தனது ஆண் நண்பருடன் டிரக்கில் சென்று கொண்டுள்ளார். டிரக்கில் எரிபொருள் குறைவாக இருப்பதாக அவருக்கு அலார்ட் கிடைத்து இருக்கிறது. இதனால், வரும் வழியில் ஏதாவது ஒரு எரிபொருள் நிலையத்தில் வாகனத்திற்கு எரிபொருளை நிரப்ப வேண்டும் என்ற திட்டத்துடன் இருவரும் பயணித்துள்ளனர்.
அப்போது கெர்னெர்ஸ்வில்லே பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் வாகனத்தை நிறுத்தி எரிபொருள் நிரப்பியிருக்கின்றனர். அப்போது எதேச்சையாக அங்கிருந்த லாட்டரி டிக்கெட்டுகளை பார்த்ததும் சரி வாங்கித்தான் பார்ப்போமே.. என்று அங்கிருந்த ஸ்க்ராட்ச் ஆப் வகையை சேர்ந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். அவரது அதிர்ஷ்டம் அந்த லாட்டரிக்கே ஒரு கோடி இரண்டு கோடி அல்ல.. ரூபாய் 8 கோடி பரிசாக அடித்துள்ளது. எரிபொருள் நிரப்ப வந்த நேரத்தில் இப்படி ஒரு பரிசு அடித்து இருக்கிறதே என்ற சந்தோஷத்தில் அங்கேயே இருவரும் துள்ளி குதித்து இருக்கின்றனர். இதுகுறித்து கீன் கூறுகையில், “நாங்கள் வந்த வாகனத்தில் எரிபொருள் நிரப்ப வேண்டியிருந்ததால் மட்டுமே இங்கே நிறுத்தினோம். இல்லாவிட்டால் இந்த லாட்டரியையே வாங்கியிருக்க மாட்டோம். எல்லையில்லா மகிழ்ச்சியில் இருக்கிறோம்” என்றார்.