ஈரான் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் சரக்கு கப்பலின் பணியாளர்களில் ஒரு இந்திய மாலுமி பத்திரமாக வீடு வந்து சேர்ந்ததாக வெளியுறவு அமைச்சகம் (MEA) இன்று தெரிவித்துள்ளது.
சிரியா நாட்டில் உள்ள ஈரான் தூதரகத்தை இஸ்ரேல் ஏவுகணைகள் மூலம் தாக்கி, பல மூத்த அதிகாரிகளை கொன்றதைத் தொடர்ந்து, ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் விமானங்கள் மூலம் இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையே பதட்டம் நிலவி வரும் சூழலில், இஸ்ரேலுக்கு தொடர்புடையதாக கருதப்படும் ஏரிஸ் கப்பலை ஈரானிய படை கைப்பற்றியது.
இந்நிலையில் ஈரானின் புரட்சிகர காவலர்களால் கைப்பற்றப்பட்ட சரக்குக் கப்பலின் பணியாளர்களில் ஒரு இந்திய மாலுமி பத்திரமாக வீடு வந்து சேர்ந்ததாக வெளியுறவு அமைச்சகம் (MEA) இன்று தெரிவித்துள்ளது. கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த அந்த பெண் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கினார்.
இதுதொடர்பாக இந்திய செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது, “ஈரானிய கடற்படையினால் கைப்பற்றப்பட்ட சரக்கு கப்பலில் 17 இந்தியர்கள் இருந்தனர். அதில் கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்த பெண் பத்திரமாக நாடு திரும்பினார். மீதமுள்ள 16 இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஈரானிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்” என பதிவிட்டிருந்தார்.
ஜோசப் என்ற இந்திய பெண் நாடு திரும்பிய பிறகு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில், “திருமதி ஆன் டெஸ்ஸா ஜோசப் வீட்டிற்கு வந்ததில் மகிழ்ச்சி. மோடியின் உத்தரவாதம் எப்போதும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வழங்கப்படும்” என தெரிவித்தார்.