ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீது முழு அடக்குமுறையை ஏவும் விதமாக தாலிபான்கள் அரசாங்கம், கல்வி உரிமையை பறித்திருக்கும் செயல் உலக நாடுகள் மத்தியில் பெரும் விவாதத்தையே உண்டாக்கியிருக்கிறது.
உலகளவில் பெண்கள் எல்லா துறைகளிலும் தங்களை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆப்கானிய பெண்களின் கல்வியை மட்டும் பறிப்பது எந்தளவுக்கு உசிதமானதாக இருக்கும் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில், தன் குடும்பத்திலிருந்து முதல் பெண்ணாக பல்கலைக்கழகம் சென்று படிக்க இருந்த நிலையில், தற்போது தனது சகோதரன் மட்டும் கல்லூரிக்கு படிக்கச் செல்வதை கண்டு வலியுடன் கூடிய அழுகையே வருகிறது என 19 வயது இளம்பெண் மர்வா கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசியுள்ள அவர், “பெண்கள் பல்கைக்கழகத்துக்கு செல்வதற்கு தடை விதித்ததற்கு பதில் தலையை துண்டிப்போம் என தாலிபான்கள் கூறியிருந்தால் கூட சரியாக இருந்திருக்கும். என்னை போன்ற பெண்கள் பிறந்திருக்கவே கூடாது. இன்னும் நான் இந்த உலகில் இருப்பதற்கு என்னை மன்னியுங்கள். எங்களை விலங்குகளை விட மோசமாக நடத்துகிறார்கள். விலங்குகளால்கூட வெளியே செல்ல முடிகிறது. ஆனால், எங்களைப் போன்ற பெண்கள் வெளியே செல்லக் கூட இப்போது உரிமை இல்லை” என உணர்வுப் பொங்க பேசியிருக்கிறார். 19 வயதான மர்வா, அண்மையில்தான் காபுலில் உள்ள மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படிப்பதற்கான நுழைவுத் தேர்வை எழுதி முடித்திருக்கிறார். முடித்துள்ளார். தன்னுடைய சகோதரரோடு சேர்ந்து கல்லூரிக்கு செல்ல மர்வா ஆவலாக இருந்த சமயத்தில்தான் தாலிபான்களின் அதிரடி அறிவிப்பு அவருக்கு இடியாக வந்து விழுந்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள மர்வாவின் சகோதரர் ஹமித் (20), “என்னுடைய சகோதரி அவரது லட்சியத்தை அடைய வேண்டும் என்பதே எங்களின் ஆசை” எனக் கூறியிருக்கிறார். காய்கறி வியாபாரம் செய்பவரின் பெண்ணான மர்வாவிற்கு, ஆப்கானிஸ்தானில் வசிக்கும் பெண்களின் உடல்நலத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக இருக்கிறார் என AFP செய்தித்தளம் குறிப்பிட்டிருக்கிறது. குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்கள் தங்களது உடல்நிலையை பேணிக் காப்பதற்காக விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என பல கனவுகளை தன்னகத்தே கொண்ட இளம்பெண்ணான மர்வா, தற்போது தன்னுடைய 6 மற்ற உடன் பிறந்தவர்களை கவனித்துக்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.