தென் அமெரிக்க நாட்டின் சிலி பகுதியில் நிரூபர் ஒருவர் திருட்டு சம்பவங்களைப் பற்றி செய்தி வழங்கிய போதே அவர் மீது அமர்ந்த கிளி அவரது காதில் பொருத்தியிருந்த இயர்போனை திருடிச் சென்றது.
தென் அமெரிக்காவின் சிலியின் சான்டியகோ பகுதியில் திருட்டு சம்பவங்கள் தொடர்கின்றது. இது பற்றி அந்நாட்டின் தொலைக்காட்சி நிரூபர் நிகோலஸ் க்ரூம் என்பவர் செய்திகளை நேரலையில் வழங்கிக் கொண்டிருந்தார். அவர் தொடர்ந்து நேரலையில் பேசிக் கொண்டிருந்தார்… ’’ பாதுகாப்பு நிறைந்த இந்த பகுதியில்’’ என கூறிக் கொண்டிருந்தபோதே ஒரு கிளி பறந்து வந்து தோள் பட்டையில் அமர்ந்தது.
திடீரென தோள் பட்டையில் கிளி அமர்ந்ததால் அவர் ஒரு கணம் தள்ளிச் செல்ல முயல்கின்றார். எனினும் செய்தியை வழங்க வேண்டியிருந்ததால் தொடர்ந்து அவரும் அதை கண்டும் காணாமல் செய்திகளை தொகுத்துக் கொண்டிருந்தபோதே அவர் காதில் அணிந்திருந்த இயர் போனை கவ்விக் கொண்டு பறந்தது. உடனடியாக சக பணியாளர்கள் கிளியை பிடிக்க முயன்றனர். ஆனால் பறந்து சென்றுவிட்டது. இந்த ருசிகரமான சம்பவம் சமூக வலைத்தலங்களில் அனைவராலும் ரசிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகின்றது.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் நேரலையில் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருட்டு நிகழ்வுகளை தொகுத்து வழங்கியபோதே ஒரு கிளியால்திருட்டு சம்பவம் நடந்துள்ளது. மேலும் அந்த கிளி அதே பகுதியில் வேறொரு இடத்தில் அந்த காது கருவியை போட்டுச் சென்றதாகவும் பின்னர் அது கிடைத்தது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.