ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்தில் இரண்டாவதாக மேலும் ஒரு நபருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
ஈரான் நாட்டின் தெஹ்ரான் நகரில் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப்புக்கு எதிராக போராடிய இளம்பெண் மாஷா அமினியை ஈரான் போலீசார் கைது செய்தனர். அப்போது, மாஷா அமினியை போலீசார் தாக்கியதில் அவர் கோமா நிலைக்கு சென்றதாக தகவல்கள் வெளியானது. பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாஷா உயிரிழந்தார். இதையடுத்து, ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தின் முதல் வெற்றியாக இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதையும், பொதுவெளியில் பெண்கள் ஹிஜாப் ஆடை அணிவதை உறுதிபடுத்தவும் ‘அறநெறி போலீஸ்’ பிரிவை ஈரான் கலைத்தது.
அதேவேளை, கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற போராட்டத்தில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்கியதில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஈரான் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் கொடூரமான முறையில் தாக்கி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பாதுகாப்பு படை வீரரை கத்தியால் குத்தியதாக மொஷென் ஷெகாரி என்ற நபருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றியது. ஹிஜாப் போராட்டம் தொடர்பாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் நபர் மொஷென் ஆவார்.
இந்நிலையில், ஹிஜாப் போராட்டத்தில் பங்கேற்ற 2-வது நபருக்கு ஈரான் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது. போராட்டத்தின் போது 2 ஈரான் பாதுகாப்பு படை வீரர்களை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டு மஜித்ரிசா ரஹ்நவர்டு என்பவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.