பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றுள்ள நிலையில், அவர் ஆரம்பம் முதலே அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டார்.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை என அக்டோபர் 20ஆம் தேதி பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார். இதையடுத்து, அடுத்த பிரதமர் பதவிக்கு முன்னாள் பிரதமர் உள்ளிட்ட பலரும் முயற்சி செய்த நிலையில், அவர்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதையடுத்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், அவருக்கு 100-க்கு மேற்பட்டோரின் ஆதரவு, அதாவது பெரும்பான்மைக்கு அதிகமாக ஆதரவு கிடைத்தது. இதையடுத்து, ரிஷியை ஆட்சி அமைக்க, மன்னர் சார்லஸ் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, மன்னர் சார்லஸை சந்தித்தபின், பிரதமராக பதவியேற்றார்.
இந்நிலையில், பதவியேற்ற உடன் புதிய அமைச்சரவை அமைப்பது தொடர்பாக இறங்கியதாக கூறப்படுகிறது. மேலும், முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸின் அமைச்சரவையில் இருந்த பலரையும் ராஜினாமா செய்யுமாறு, ரிஷி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 3 அமைச்சர்கள் பதவி விலக கேட்டு கொள்ளப்பட்டதாகவும், அவர்களில் வணிக செயலாளர் ஜேக்கப் ரீஸ்-மோக், நீதித்துறை செயலாளர் பிராண்டன் லூயிஸ் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் விக்கி ஃபோர்ட் ஆகியோரும் அடங்குவர் என கூறப்படுகிறது. ஆனால், நிதித்துறை அமைச்சர் ஜெர்மி ஹண்ட் தொடர்ந்து பதவியில் நீடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பதவியேற்ற பின் ரிஷி சுனக் பேசுகையில், ”நாட்டின் பொருளாதரத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்வேன் என உறுதியளித்தார். மேலும், தேசிய சுகாதார அமைப்பு திட்டம் , கல்வி, பாதுகாப்பான தெருக்கள், ஆயுதப்படைகளை ஆதரித்தல், மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றும்” என்றும் கூறினார்.