தனக்கு ஆண்டுக்கு 1.03 கோடி ரூபாய் சம்பளம் (இந்திய மதிப்பில்) தரும் தனது நிறுவனம் தன்னிடம் அதற்கான வேலையைப் பெறுவதில்லை என்று குற்றஞ்சாட்டி அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆரோக்கியமான பணிச் சூழல் ஒரு நபரின் மனநலத்திற்கு மிகவும் அவசியம் என்று கூறப்படுகிறது. ஆனால், தன் பணியே தனக்கு பெரிய அழுத்தமாக ஆகியிருப்பதாகக் கூறியுள்ளார் டெட்மார் மில்ஸ். இவர், ஐரிஷ் ரெயில் என்ற நிறுவனத்தில் நிதி மேலாளராகப் பணிபுரிகிறார். தனது பணிச் சூழல் பற்றி அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நான் என் அலுவலக அறைக்குள் வந்ததும் கணினியை இயக்குவேன். அதில் வந்துள்ள மின்னஞ்சல்களை சோதிப்பேன். பணி தொடர்பான அஞ்சல்கள் இருக்காது. எனக்கான தொடர்புகளும் ஏதும் இருக்காது. சக பணியாளர்கள் கூட பணி நிமித்தமாக ஏதும் அனுப்பியிருக்க மாட்டார்கள். வாரத்தில் 5 நாட்களில் நான் 2 நாட்கள் தான் அலுவலகமே செல்கிறேன். அப்போதும் கூட சரியான வேலை இல்லாமல் வீடு திரும்பிவிடுவேன். அலுவலக நேரத்தில் செய்தித்தாள் வாசிக்கிறேன், சாண்ட்விச் சாப்பிடுகிறேன், ஒரு குறுநடை கூட சென்று வருகிறேன்.
எனது நிறுவனத்தில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் பற்றி நான் ஒருமுறை வெளிக்கொண்டுவந்தேன். அதன் பின்னர் தான் இது எல்லாம் ஆரம்பித்தது. எனக்கு 2010ஆம் ஆண்டு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இருந்தாலும் கூட 3 மாதங்கள் கட்டாயமாக மருத்துவ விடுப்பில் அனுப்பப்பட்டேன். பின்னர் எனக்கு அதே பணி, அதே சம்பளம், அதே பணி மூப்பு பலன்களைத் தருகிறோம் என்ற ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. மீண்டும் அலுவலகம் வந்தேன். ஆனாலும், என் திறமைக்கு ஏற்ப எந்த ஒரு வேலையும் தருவதில்லை. அதனால்தான் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன்” என்றார்.
பணியிட உறவுகள் ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜரான அவர், “என்னுடைய திறமைகளை பணியில் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை என்று நான் தெரிவித்துள்ளேன்” என்றார். ஆனால், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனமோ மில்ஸ் தவறுகளை கண்டுபிடித்ததற்காக எந்த ஒரு தண்டனையையும் அவருக்குத் தரப்படவில்லை என்று கூறுகிறது. தான் பணிபுரிந்த நிறுவனத்தின் மீது மில்ஸ் தொடர்ந்த வழக்கு ஒரு விநோத வழக்காகவே பார்க்கப்படுகிறது.