வீட்டுப்பாடம் செய்யாமல் டிவி பார்த்த சிறுவனை, இரவு முழுவதும் தூங்காமல் டிவி பார்க்க வேண்டும் என பெற்றோர் தண்டனை கொடுத்த சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது.
சீனாவின் ஹுனான் நகரத்தை சேர்ந்த பெற்றோர், அவர்களது 8 வயது மகனை வீட்டில் விட்டுவிட்டு சென்றனர். வெளியில் சென்ற தம்பதி, மகனை வீட்டுபாடம் செய்துவிட்டு, 8.30 மணிக்கு தூங்க செல்லுமாறு கூறியிருந்தனர். அவர்கள் வீடு திரும்பியபோது, அந்த சிறுவன் ஹோம் ஒர்க்கை முடிக்காமல் டிவி பார்த்தபடி நேரத்தை செலவழித்துள்ளான். மேலும், பெற்றோர் வந்த பிறகு அவன் தூங்க சென்றுள்ளான். இதனால் கோபமடைந்த பெற்றோர் அவனுக்கு தண்டனை கொடுத்தனர்.
உறங்கிக் கொண்டிருந்த சிறுவனை இழுத்துவந்த அவனது தாய், வலுக்கட்டாயமாக டிவி பார்க்க வைத்துள்ளார். மேலும், இரவு முழுவதும் அந்த சிறுவனை அவர் உறங்கவிடவில்லை என்பது தான் இதில் அதிர்ச்சியூட்டும் செயல். முதலில் அந்த சிறுவன் உற்சாகமாகவே டிவி பார்த்தாலும், மெல்ல அவன் உறங்காமல் இருக்க சிரமப்படுவது தெரிகிறது. மேலும், சிறுவன் அவர்களுக்கு தெரியாமல் அறைக்கு சென்று தூங்கிவிட்டால் என்ன செய்வது என்று, கனவனும், மனைவியும், மாறி மாறி அவனை இரவு முழுவதும் கண்காணித்துள்ளனர். இடையில் இடையில் சற்று கண் அயர்ந்த சிறுவனை அவனது தந்தை எழுப்பியும் விடுகிறார்.
அதிகாலை 5 மணி வரை அவனை அவர்கள் உறங்கவிடவில்லை. சிறுவன் உறங்கமுடியாமல் அழுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, பலரும் பெற்றோரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிறுவனின் மனதில் இது ஆழமான காயத்தை ஏற்படுத்தியிருக்கும் எனவும், அவன் இனி மனதில் ஒருவித பயத்துடனே வளர்வான் எனவும் சிலர் தெரிவித்தனர். சிலர் ஒரு வேளை இதுவே அவனுக்கு பழக்கமாகி, தினமும் தாமதமாக உறங்கக்கூடும் எனவும் சிலர் தெரிவித்தனர். பெரும்பாலும் இணையவாசிகள், பெற்றோர் இவ்வளவு கடுமையாக நடந்துகொள்ள கூடாது என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.