பணியின்போது திட்டியதால் முதலாளியை காவலாளி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் பாங்காக்கின் லம்பினி பகுதியில் சாவத் ஸ்ரீராட்சலாவ் (44) என்பவர் அரோம் பனன் (56) என்பவரின் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். அந்த காவலாளியிடம் முதலாளி எப்போதும் கடுமையாக நடந்துகொண்டுள்ளார். தகாத வார்த்தைகளால் திட்டியும், கண்டிப்புடன் நடத்தியும் வந்துள்ளார். மேலும், மற்ற பணியாளர்களை விட காவலாளியை அதிக நேரம் வேலை வாங்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால், முதலாளியின் மீது காவலாளி சாவத், கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். அதேபோன்று சம்பவத்தன்று முதலாளி அவரை கடிந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சாவத், தனது முதலாளியின் நெஞ்சில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் முதலாளி அரோம் பனன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார், காவலாளியை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது சாவத் அளித்த வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்தது. அவர் கூறியதாவது, ரொம்ப நாளாகவே என் முதலாளியின் மேல் கடும் கோபத்தில் இருந்தேன். வீட்டுக்கு சென்றால் கூட அவர் என்னை திட்டியதும், கடுமையாக நடந்து கொண்டதுமே என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். இதனால் எனக்கு தூக்கம் இல்லாமல் பல நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தேன் என்று கூறினார். அரோம் பனனை கொலை செய்தது தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், காவலாளி சாவத்தின் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.