கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என வெறும் பேச்சு வழக்காக கேள்வியுற்றாலும் தற்போதைய நவீன யுகத்தில் இப்படி சுற்றமும் நட்பும் சூழ அங்கொன்றும் இங்கொன்றுமாகவேதான் வாழ்ந்து வருகிறார்கள். அதுவும் முதியவர்கள் தங்களது பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைத்தாலும் பணிச் சூழல் உள்ளிட்ட பல காரணங்களால் பிரிந்திருக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இதனால் பல இடங்களில் நோய்வாய்ப்பட்ட பெற்றோர்களும், முதியவர்கள் தனித்து விடப்படுகிறார்கள்.
இப்படி இருக்கையில், ஆதரவில்லாமல் இருக்கும் முதியவரை அவரது பிள்ளைகள் இருக்கும் வீட்டுக்கு அருகிலேயே குடியமர்த்த செய்யும் வகையில், 7 அடி கொண்ட முதியவரின் வீட்டை மூங்கிலால் கட்டி அலேக்காக தூக்கிச் செல்வதும், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாக கிராம மக்களும் உற்சாகப்படுத்துவதும் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஜாம்போங்கா டெல் நோர்டே என்ற பகுதியில் அண்மையில் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பான வீடியோவை UNILAD என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது. அதில், ஊர் மக்கள் அந்த முதியவரின் வீட்டை தூக்கிச் செல்வதும், கிராமத்தினர் அவர்களுக்கு வழிவிட்டு உற்சாகப்படுவதும் இடம்பெற்றிருக்கிறது. பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை நிறுத்தி நிறுத்திச் சென்று இரண்டு மணிநேரத்தில் முதியவரை அவரது பிள்ளைகள் இருக்கும் குடியிருப்புக்கு அருகிலேயே வீட்டோடு குடியேறச் செய்துள்ளனர். இது தொடர்பாக பேசியுள்ள கிராமத்தினர் ஒருவர், “முதியவரை கவனிப்பதற்கு என யாரும் இல்லை. அவருடைய மனைவியும் இறந்துவிட்டார். ஆகையால் முதியவரின் பிள்ளைகளோ தங்கள் வீட்டுக்கு அருகேயே வைத்து அவரை பார்த்துக்கொள்ள ஆசைப்பட்டார்கள். ஆனால், இருதரப்பினரின் வீடும் வெவ்வேறு திசையில் இருப்பதோடு, முதியவரின் வீடும் மிகவும் பாரமாக இருப்பதால் அவர்களால் கொண்டுச் செல்ல சிரமாக இருந்திருக்கிறது.
வீடியோவை காண: https://www.instagram.com/reel/Ck0rnXQjARz/?utm_source=ig_web_button_share_sheet
ஆகையால், தாமாக முன்வந்து கிராமத்தினர் ஒன்று சேர்ந்து வீட்டை பெயர்த்து கொண்டுச் சேர்த்திருக்கிறார்கள். முதியவரை வீட்டோடு கொண்டு சேர்த்ததால் அனைவரும் ரொம்பவே சோர்வாக இருந்ததால் அனைவருக்கும் பெரியவரின் குடும்பத்தினர் விருந்து சாப்பாடு போட்டிருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார் என அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.