ஒரே ஒரு வீட்டிற்கு பணம் கட்டிய நிலையில், 84 வீடுகளுக்கு பெண்மணி ஒருவர் சொந்தக்காரர் ஆனதால், திகைத்துப்போய் உள்ளார்.
அமெரிக்காவின் நெவேடா மாகாணத்தின் ரேனோ பகுதியில் ஒரு வீட்டை வாங்க வேண்டும் எனப் பெண் ஒருவர் ஆசைப்பட்டுள்ளார். அதற்காக சிறிது சிறிதாகப் பணத்தை சேமித்து இறுதியில் 5,94,481 அமெரிக்க டாலர் கொடுத்து குறிப்பிட்ட பகுதியில் ஒரே ஒரு வீடு வாங்கினார். இந்நிலையில், சமீபத்தில் எதார்த்தமாக அந்த வீட்டின் பத்திரப்பதிவை பார்த்தபோது அவருக்கு பெரும் ஆச்சர்யம் காத்திருந்தது. ஒரே ஒரு வீடு வாங்க மட்டும் பணம் கொடுத்த அந்தப் பெண்ணுக்கு அந்தப் பகுதியில் உள்ள 84 வீடுகள் மற்றும் இரண்டு பொதுவான நிலம் என பெரும் ஜாக்பாட் அடித்துள்ளது. அதன் மொத்த மதிப்பு 50 மில்லியன் அமெரிக்க டாலராகும்.
இதை பார்த்ததும் ஆச்சர்யத்தில் உறைந்த அந்தப் பெண், சிறிது சுதாரித்துக் கொண்டு, இதில் ஏதோ தவறு நடந்திருக்கலாம் என முடிவு செய்தார். அதைத் தொடர்ந்து, நிலத்தை தனக்கு விற்ற அதிகாரியிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதற்கு அதிகாரிகளோ, “ஏதோ தவறு நடந்திருக்கிறது.. விரைவில் சரி செய்துவிடலாம்” எனக் கூறியிருக்கின்றனர். இதையடுத்து, பத்திரப்பதிவு அலுவலகம் சென்ற அந்தப் பெண்ணின் பத்திரத்தை வாங்கிப் பார்த்த அதிகாரிகள், இந்த குழப்பத்துக்குக் காரணம் எழுத்துப் பிழை என்பதை கண்டறிந்தனர். பின்னர் அதிகாரிகள் அந்தப் பெண்ணிடம், ”வேறு ஒருவரின் சொத்து விவரங்கள் தவறுதலாக உங்களுடைய பத்திரத்தில் ‘காஃபி பேஸ்ட்’ (Copy&Paste) செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
உடனடியாக இந்தப் பிழையை திருத்த வேண்டும் எனக் கூறி அதிகாரிகள் அதை சரிசெய்தனர். பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதிகாரிகள், ”அந்தப் பெண்மணி இந்த சொத்தை மீண்டும் ஒப்படைக்க மறுப்பு தெரிவிக்கலாம். ஆனால், இதுவரை அவர் தரப்பில் அப்படி ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இதுவே மகிழ்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.