புதிய ஆண்டு பிறக்க உள்ள நிலையில் பலருக்கும் எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளும், அதே நேரத்தில் பயங்களும் உள்ளன. சிலர் முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்; இன்னும் சிலர் எதிர்பாராத சம்பவங்கள் ஏற்படுமோ என்ற கவலையில் உள்ளனர். இப்படியான சூழலில், பிரபல பிரெஞ்சு தீர்க்கதரிசி நோஸ்ட்ரடாமஸ் (Nostradamus) 2026 ஆண்டைப் பற்றி கணித்ததாக சொல்லப்படும் தீர்க்கதரிசனங்கள், சமூக ஊடகங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளன. அவை உண்மையாகி விடுமோ என்ற அச்சமும், அதே சமயம் ஆவலும் மக்களிடையே உருவாகியுள்ளது.
நோஸ்ட்ரடாமஸ் யார்? அவரது தீர்க்கதரிசனங்கள் ஏன் பிரபலமானவை?
நோஸ்ட்ரடாமஸ் என்பவர் 1503ஆம் ஆண்டு பிரான்ஸின் செயிண்ட்-ரெமி (Saint-Rémy) என்ற நகரில் பிறந்தவர். அவரது இயற்பெயர் மிசேல் டி நோஸ்ட்ரடாம் (Michel de Nostredame). அவர் ஒரு மருத்துவராகவும், ஜோதிடராகவும், எதிர்காலத்தை கணிப்பவராகவும் அறியப்பட்டார்.
அவர் எழுதிய “Les Prophéties” என்ற புத்தகத்தில் நூற்றுக்கணக்கான கவிதை வடிவிலான தீர்க்கதரிசனங்கள் இடம்பெற்றுள்ளன. பிரான்ஸ் புரட்சி, ஹிட்லரின் எழுச்சி, இயற்கை பேரழிவுகள் போன்ற பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளை அவர் முன்கூட்டியே கணித்ததாக சிலர் நம்புகின்றனர். இதனால் அவரது பெயர் உலகம் முழுவதும் பிரபலமானது.
2026 ஆண்டுக்கான நோஸ்ட்ரடாமஸின் கணிப்புகள் என்ன?
2026 குறித்து சொல்லப்படும் நோஸ்ட்ரடாமஸின் கணிப்புகளில், மிகவும் அதிர்ச்சியளிப்பதாக கருதப்படுவது ஒரு பெரிய போர் பற்றியதாகும். உலகம் முழுவதையும் பாதிக்கும் அளவுக்கு ஒரு மாபெரும் போர் நடைபெறலாம் என அவர் கணித்துள்ளதாக சிலர் நம்புகின்றனர். இதை சில ஆய்வாளர்கள் மூன்றாம் உலகப் போர் (World War III) ஆக இருக்கலாம் என்றும் ஊகிக்கிறார்கள். அப்படி ஒரு போர் நடந்தால், பூமியில் உள்ள ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு மனிதரும் அதன் தாக்கத்தை சந்திக்க நேரிடலாம்.
மேலும், நோஸ்ட்ரடாமஸ் கூறியதாக சொல்லப்படும் ஒரு வரியில், “பெரிய தேனீக் கூட்டம் வரும்; இரவு முழுவதும் இருளாக மாறும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை வரலாற்று ஆய்வாளர்கள் நேரடி அர்த்தமாக அல்ல, உருவக மொழி (metaphor) ஆகவே பார்க்கிறார்கள்.
வரலாற்றில் தேனீக்கள் அதிகாரம், வெற்றி, ஆட்சி போன்றவற்றின் அடையாளமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, பழமையான எகிப்து காலத்திலும், நெப்போலியன் காலத்திலும் தேனீ சின்னம் அதிகாரத்தின் குறியீடாக இருந்தது. அதனால், இந்த வரி ஒரு சக்திவாய்ந்த தலைவர் அல்லது சக்தி எழுச்சி பெற்று, உலகின் தற்போதைய அரசியல் மற்றும் சமூக அமைப்புகளை பெரிதும் மாற்றக்கூடும் என்பதைக் குறிக்கலாம் என சில அறிஞர்கள் விளக்குகின்றனர்.
“ரத்தம் பெருகும்” என்ற தீர்க்கதரிசனத்தின் அர்த்தம் என்ன?
நாஸ்ட்ரடாமஸ் கூறிய தீர்க்கதரிசனங்களில், சுவிட்சர்லாந்தின் தெற்குப் பகுதியான டிசினோ, அதாவது வடக்கு இத்தாலியை ஒட்டிய மாகாணம் குறித்து வரும் ஒரு குறிப்பில், “ரத்தம் பெருகும்” என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் நேரடியான அர்த்தம் குறித்து ஒருமித்த கருத்து இல்லை. ஆனால் பல ஆய்வாளர்கள் இதை உருவக (metaphor) மொழியாக பார்க்கிறார்கள். அதாவது, உண்மையில் ரத்தம் வெள்ளம் போல் ஓடும் என்பதைக் காட்டிலும், பெரும் மோதல், போர்சூழல், அல்லது அமைதியின்மை மற்றும் வன்முறை அதிகரிப்பு என்பவற்றைக் குறிக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.
சிலர், இது எதிர்வரும் ஆண்டுகளில் ஐரோப்பாவில் புதிய கலவரங்கள் அல்லது போர் நிலை உருவாகலாம் என்பதற்கான கணிப்பாக இருக்கலாம் என்று விளக்குகின்றனர். குறிப்பாக, ஏற்கனவே அரசியல் நிலைமையற்ற தன்மை மற்றும் இராணுவ பதற்றம் காணப்படும் பகுதிகளில் இந்த மோதல்கள் தீவிரமடையலாம் எனவும் கூறப்படுகிறது.
டிசினோ பகுதி இயற்கை அழகு, ஏரிகள், பனிப்பாறைகள் போன்றவற்றுக்குப் பெயர் பெற்ற இடம் என்பதால், அங்கு வன்முறை அல்லது கலவரம் ஏற்படலாம் என்ற இந்த தீர்க்கதரிசனம் பலருக்கு அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில், நாஸ்ட்ரடாமஸின் தீர்க்கதரிசனங்கள் பெரும்பாலும் தெளிவற்றவையாகவும், உருவகங்களால் நிரம்பியவை என்பதாலும், அவற்றை பல விதமாகப் பொருள் கொள்ள முடிகிறது. அதனால் சிலர் இதை வரவிருக்கும் ஆபத்துக்கான எச்சரிக்கை எனப் பார்க்கிறார்கள்.. இன்னும் சிலர் இதை சாதாரண தற்செயல்கள் எனக் கருதுகிறார்கள். எப்படியிருந்தாலும், 2026 குறித்து நாஸ்ட்ரடாமஸ் கூறிய கணிப்புகள் உலகம் முழுவதும் மீண்டும் விவாதத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளன என்பதே உண்மை.
Read More : மேடையில் மனிதர்களை போலவே டான்ஸ் ஆடிய ரோபோக்கள்; எலான் மஸ்க் பாராட்டு! இணையத்தை அதிர வைத்த வைரல் வீடியோ..!



