பனிக்காலம் தொடங்கினாலே சருமத்தைப் போலவே நமது கூந்தலும் பல சவால்களை சந்திக்கிறது. வறண்ட காற்றும், காற்றில் நிலவும் ஈரப்பத குறைவும் உச்சந்தலையை எளிதில் வறட்சியடைய செய்கின்றன. இதனால் பொடுகுத் தொல்லை அதிகரிப்பதோடு, முடியின் வேர்கள் பலமிழந்து முடி உதிர்தல் (Hair Fall) ஒரு பெரும் புகாராக மாறுகிறது.
இதுமட்டுமின்றி, குளிருக்காக நாம் பயன்படுத்தும் அதிகப்படியான வெந்நீரும் கூந்தலின் இயற்கை எண்ணெய் பசையை நீக்கி, பாதிப்பை தீவிரப்படுத்துகிறது. இந்தச் சிக்கல்களில் இருந்து விடுபட்டு, குளிர்காலத்திலும் கூந்தலைச் செழிப்பாக வைத்திருக்க உதவும் சில எளிய இயற்கை வழிமுறைகளை இங்கே காணலாம்.
கிரீன் டீ : உடல் எடையை குறைக்க பயன்படுத்தும் கிரீன் டீ, கூந்தல் வளர்ச்சிக்கும் உதவும் என்பது பலருக்குத் தெரியாத ரகசியம். பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் கிரீன் டீ பைகளை வெதுவெதுப்பான நீரில் மீண்டும் ஊறவைத்து, அந்தத் தண்ணீரைக் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வேர்களுக்குப் புத்துயிர் அளித்து, முடி உதிர்வை வெகுவாகக் குறைக்கும்.
வெங்காய சாறு : குளிர்காலத்தில் கூந்தல் வேர்களை பலப்படுத்த வெங்காய சாறு ஒரு சிறந்த தீர்வாகும். இதில் நிறைந்துள்ள ‘சல்பர்’ சத்து, கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து புதிய முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை வெங்காய சாற்றை உச்சந்தலையில் தடவி, 20 நிமிடங்கள் ஊறவைத்து அலசினால், முடி உதிர்வு நின்று வேர்கள் உறுதியாகும்.
தேங்காய் பால் மற்றும் எலுமிச்சை : கூந்தலுக்கு மென்மையையும், ஊட்டச்சத்தையும் அளிக்க தேங்காய் பால் ஒரு சிறந்த இயற்கை கண்டிஷனர். இதில் உள்ள பொட்டாசியம் முடியின் வறட்சியைப் போக்கும். தேங்காய் பாலுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால், முடி வளர்வதுடன் பொடுகுத் தொல்லையும் முற்றிலுமாக நீங்கும்.
உணவே மருந்து : வெளியிலிருந்து செய்யும் பராமரிப்பை விட, நாம் உண்ணும் உணவே கூந்தலுக்கு உண்மையான ஊட்டச்சத்தைத் தருகிறது. குறிப்பாக, இரும்புச்சத்து மற்றும் புரதம் நிறைந்த கீரைகள், ப்ரோக்கோலி, பருப்பு வகைகள் மற்றும் பாதாம் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் கேரட், பீட்ரூட் மற்றும் வெல்லம் போன்ற உணவுகள் வேர்களுக்குத் தேவையான ஆக்சிஜனை வழங்கி, முடியை வேரிலிருந்து வலுப்படுத்தும்.
வெந்நீர் குளியல் : குளிருக்காக மிக அதிக வெப்பமுள்ள வெந்நீரில் தலைக்குக் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிக வெப்பம் முடியின் வேர்களைத் தளர்வடையச் செய்து, முடியை உயிரற்றதாக மாற்றிவிடும். இதற்குப் பதிலாக மிதமான வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துவதே சிறந்தது.



