4 மாதம் முன் திருமணம் ஆன மனைவியை, இன்சூரன்ஸ் பணம் 30 லட்சம் பெறுவதற்காக கொலை செய்து, அதை சாலை விபத்தாக காட்டிய கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹஜாரிபாக் மாவட்டம், பதாமா அருகே வசித்து வந்தவர் முகேஷ்குமார் மேத்தா (30). அவருடைய மனைவி செவந்தி குமாரி (23). நான்கு மாதங்களுக்கு முன்தான் இவர்களின் திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் செவந்திகுமாரிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால், கணவர் முகேஷ்குமார் அவரை மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்.
செவந்திகுமாரி சாலை விபத்தில் இறந்துவிட்டால் 30 லட்சம் ரூபாய் விபத்துக் காப்பீடு கிடைக்கும் என்பதற்காக முகேஷ், மனைவியை ஹெல்மெட்டால் தலையில் அடித்து, கழுத்தை நெரித்துக் கொன்று, பின்னர் சாலை விபத்து போல நாடகம் போட்டார். தன் மீது சந்தேகம் வராமல் இருக்க, தனக்குத்தானே சிறு காயங்களை ஏற்படுத்தியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
சாலை விபத்தில் கணவன்–மனைவி இருவரும் காயமடைந்ததாக தகவல் வந்ததைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு, செவந்திகுமாரி உயிரிழந்திருந்தார். முகேஷ்குமார் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவரது செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
தீவிர விசாரணையில், மனைவியை கொன்று இன்சூரன்ஸ் தொகை பெற முயன்றது என முகேஷ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருமணம் ஆன நான்கு மாதங்களிலேயே, பணத்துக்காக மனைவியை கொன்ற கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Read more: Breaking : இவர்களுக்கும் 20% தீபாவளி போனஸ்.. குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு..