தமிழ்நாடு அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்களின் ஒரு பகுதியாக, தொழில் முனைவோரை உருவாக்கும் முயற்சியின் கீழ், “ஆவின் பாலகம் மானிய திட்டம்” பலருக்கு வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பாகவே அமைகிறது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், குறைந்த வருமானம் கொண்ட சமூகத்தினருக்கு தனி தொழிலை ஆரம்பிக்க அரசு மானிய உதவி வழங்குகிறது. இத்திட்டத்தின் மூலம், ஆவின் நிறுவனத்தின் அனுமதியுடன் பாலகம் அமைக்க விரும்பும் நபர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான முழுத் திட்டத்திற்குள், 30% வரை அதாவது ரூ.90,000 வரை மானியம் வழங்கப்படும்.
இந்த நிதி உதவியை பயனாளிகள், பாலகத்திற்குத் தேவையான சீருடைகள், குளிர்சாதன பெட்டிகள் (Freezer, Cooler), மின்சார வாகனம் உள்ளிட்ட முக்கிய உபகரணங்களை வாங்க பயன்படுத்தலாம். திட்டத்தின் நோக்கம், அரசின் நிதியுதவியுடன் பயனாளி தன்னிறைவு அடைந்து, நீண்ட கால வருமானம் பெறும் வழியை உருவாக்குவதாகும்.
இந்தத் திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால், விண்ணப்பதாரர்கள் சில தகுதிகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவராகவும், 18 முதல் 55 வயதுக்குள் இருக்கவும் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்பதுடன், இதற்கு முன் தாட்கோவின் கீழ் ஏதேனும் மானியம் பெற்றிருக்கக் கூடாது.
பாலகம் அமைக்கப்படும் இடம் குறைந்தபட்சம் 100 சதுர அடியாக இருக்க வேண்டும். அது சொந்தமான இடமாகவோ, வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்த இடமாகவோ இருக்கலாம். உணவு உரிமம் பெறுதல் உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளை முன்கூட்டியே பெற்றிருக்க வேண்டும். கடையின் அடையாளப் பலகை மற்றும் உளமைப்புத் திட்டங்களை பயனாளியே தனிச்செலவில் செய்ய வேண்டிய அவசியமும் உள்ளது. மேலும், ஆவின் நிறுவனத்தின் விதிமுறைகளையும் ஒழுங்குமுறைகளையும் கடைபிடிக்க ஒப்புக்கொள்வது அவசியம்.
விண்ணப்பதாரர்கள் இந்த மானியத்திற்காக நேரிலும் ஆன்லைனாகவும் விண்ணப்பிக்கலாம். உங்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். அதேசமயம், தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tahdco.com/ மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.