தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சூர்யா. இவர், சினிமாவை தாண்டி அகரம் அறக்கட்டளை மூலம் மாணவர்களை படிக்க வைத்து வருகிறார். சூர்யாவிடம் அந்தோணி என்பவர் தனி பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது மாம்பலம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக கூறி ரூ.42 லட்சம் மோசடி செய்துவிட்டதாக கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பாதுகாவலர் அந்தோணி ஜார்ஜிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்ததாக சுலோச்சனா, அவரது மகன்கள் பாலாஜி, பாஸ்கர் மற்றும் சகோதரி விஜயலட்சுமி ஆகிய 4 பேரை மாம்பலம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் நடிகர் சூர்யா வீட்டில் பணிபுரிந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடி வெளிப்பட்டதை அடுத்து, சூர்யா அவர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளார்.
இந்த மோசடி கும்பல், ரூ.5,500 முதலீடு செய்தால் மாதம் ஒரு கிராம் தங்க நாணயம் கிடைக்கும் என பலரிடம் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர். ஆரம்பத்தில் நல்ல தங்க நாணயத்தை கொடுத்துவிட்டு, பின்னர் பெரிய தொகையை பெற்றுக் கொண்டு போலியான தங்கத்தை கொடுத்து ஏமாற்றி வந்துள்ளனர். இவ்வாறு பலரிடம் இருந்து ரூ.2.5 கோடிக்கும் மேல் மோசடி செய்திருப்பது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த கும்பல் மீது அண்ணாநகர், மாதவரம் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தற்போது அம்பலமாகியுள்ளது. எனவே, அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.