குடும்பத்தின் ஆணிவேராகவும், காவல் அரணாகவும் விளங்குவது குலதெய்வம். ஒருவரது குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக இருந்தால் மட்டுமே அந்த வீட்டில் சுபகாரியங்கள் தடையின்றி நடக்கும் என்பதும், வறுமை நீங்கிச் செல்வம் பெருகும் என்பதும் ஆன்மிக ரீதியான அசைக்க முடியாத நம்பிக்கை. வாழ்வாதாரத்திற்காக பிறந்த ஊரை விட்டு வெளியூர்களில் வசிப்பவர்கள், அடிக்கடி குலதெய்வ கோவிலுக்குச் செல்ல முடியாத சூழலில், தங்கள் வசிக்கும் இல்லத்திலேயே குலதெய்வ சக்தியை குடியேற்றுவதற்கான எளிய தாந்த்ரீக வழிமுறைகளை இங்கே காணலாம்.
நிலைப்படியில் செய்ய வேண்டிய பாதுகாப்பு முறை :
குலதெய்வத்தின் ஆற்றல் வீட்டிற்குள் நுழைய முதலில் நிலைப்படியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். சிறிதளவு மஞ்சள், மண், சந்தனம், குங்குமம், விபூதி, சாம்பிராணி மற்றும் அடுப்புக்கரி ஆகியவற்றை ஒரு சிறிய சிவப்புத் துணியில் வைத்து முடிச்சாகக் கட்டிக் கொள்ள வேண்டும். இந்த முடிச்சை வீட்டின் தலைவாசல் நிலைப்படியின் உட்புறமாக, மையப்பகுதியில் ஆணி அடித்துத் தொங்கவிட வேண்டும். தினமும் இந்தப் பொட்டலத்திற்கு தூப தீபம் காட்டி வழிபட்டு வந்தால், வெளியிலிருந்து வரும் தீய சக்திகள் தடுக்கப்பட்டு, குலதெய்வத்தின் அருள் அலைகள் வீட்டிற்குள் நிலைபெறும் என்பது முன்னோர்களின் வாக்கு.
கலச பூஜை முறைகள் :
பூஜை அறையில் குலதெய்வ சக்தியை நிலைநிறுத்த ஒரு விசேஷ கலச வழிபாட்டை மேற்கொள்ளலாம். ஒரு செம்பு அல்லது பித்தளை சொம்பில் வெட்டிவேர், பச்சை கற்பூரம், ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து, சரிபாதி அளவில் பன்னீரும் தண்ணீரும் ஊற்ற வேண்டும். அந்த சொம்பை சுற்றி நூல் அல்லது பட்டுத் துணியைச் சுற்றித் தயார் செய்ய வேண்டும். ஒரு மரப் பலகையின் மேல் வாழை இலை விரித்து, அதில் பச்சரிசியை பரப்பி, அதன் மீது இந்தக் கலசத்தை வைக்க வேண்டும். கலசத்தின் வாய்ப்பகுதியில் மாவிலை அல்லது வெற்றிலைகளை அடுக்கி, அதன் நடுவே ஒரு வாழைப்பூவின் நுனிப்பகுதி மேல்நோக்கி இருக்கும்படி அமர வைக்க வேண்டும்.
வழிபாட்டு பலன்கள் :
இந்த கலசத்திற்கு வில்வ இலை அல்லது ஊமத்தம் பூக்களால் அர்ச்சனை செய்வது கூடுதல் பலன் தரும். வாழைப்பூ 3 நாட்கள் வரை வாடாமல் இருக்கும் என்பதால், அந்த 3 நாட்களும் நம்பிக்கையுடன் பூஜை செய்ய வேண்டும். தொடர்ந்து செய்ய விரும்புபவர்கள் 3 நாட்களுக்கு ஒருமுறை வாழைப்பூவை மாற்றிக் கொள்ளலாம். பூஜை முடிந்ததும் கலசத்தில் உள்ள தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளித்துவிட்டு, மீதமுள்ள நீரை குளிக்கும் நீரில் கலந்து நீராடலாம். அடியில் இருந்த பச்சரிசியை சமைத்து உணவாகவோ, வாழைப்பூவை வடையாகவோ செய்து அக்கம் பக்கத்தினருக்கு பிரசாதமாக வழங்கலாம்.
இதோடு, ‘ஓம் பவாய நம, ஓம் சர்வாய நம’ உள்ளிட்ட அஷ்ட மூர்த்தி மந்திரங்களை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 108 முறை பாராயணம் செய்து வந்தால், எத்திசையில் உங்கள் குலதெய்வம் இருந்தாலும் அதன் அருள் உங்கள் வீட்டிற்குள் குடிபுகும் என்பது நிச்சயம்.



