இணைய வசதி இல்லாத இடங்களுக்கு பயணம் செய்யும்போது அல்லது டேட்டா தீர்ந்து போகும்போது வழியறிய முடியாமல் தவிக்கும் நிலை பலருக்கும் ஏற்படுகிறது. இந்த சிக்கலை தீர்க்கும் வகையில், கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலி ஒரு சிறந்த அம்சத்தை வழங்குகிறது. அதுதான் ஆஃப்லைன் வரைபடங்கள் (Offline Maps). இணைய வசதி இல்லாமலேயே வழிகளை தேடவும், பாதைகளை கண்டறியவும் உதவும் இந்த அம்சத்தை, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனாளர்கள் மிக எளிதாக பயன்படுத்தலாம்.
ஆஃப்லைன் வரைபடங்களை பதிவிறக்கம் செய்வது எப்படி..?
இந்த வசதியைப் பயன்படுத்துவதற்கு, நீங்கள் இணைய வசதியுடன் இருக்கும்போது, வரைபடங்களை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
* உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோனில் கூகுள் மேப்ஸ் செயலியை முதலில் திறக்கவும்.
* செயலியின் வலது மேல் மூலையில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தை (Profile Picture) தொட்டு, மெனுவைப் பெறவும்.
* அந்த மெனுவில் உள்ள ‘ஆஃப்லைன் மேப்ஸ்’ (Offline Maps) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
* அடுத்து, ‘உங்கள் சொந்த வரைபடத்தைத் தேர்ந்தெடுக்கவும்’ (Select Your Own Map) என்ற வசதியைத் தேர்வு செய்யவும்.
* இப்போது திரையில் தோன்றும் வரைபடத்தில், நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் நகரம் அல்லது பகுதியைச் சரியாகத் தேர்ந்தெடுக்கவும்.
* இறுதியாக, ‘டவுன்லோட்’ (Download) பொத்தானை அழுத்தவும். நீங்கள் பதிவிறக்கம் செய்த வரைபடத்திற்கு ஒரு பிரத்யேகப் பெயரை இட்டுச் சேமித்துக்கொள்ளலாம்.
பயன்பாடு மற்றும் வரம்புகள் :
மேற்கண்ட வழிமுறைகள் மூலம் வரைபடங்களை பதிவிறக்கம் செய்த பிறகு, நீங்கள் இணைய வசதி இல்லாத போதும் (அல்லது ஆஃப்லைன் பயன்முறையில்) அந்த வரைபடங்களை திறந்து இடங்களை தேடலாம் மற்றும் வழிகளை காணலாம்.
இருப்பினும், ஆஃப்லைன் வரைபடங்களை பயன்படுத்தும்போது சில வரம்புகள் உள்ளன. உதாரணமாக, வழியில் இருக்கும் லைவ் டிராஃபிக் (Live Traffic) தகவல்கள், நிகழ்நேரப் பாதை மாற்றம் (Real-time Navigation) போன்ற விவரங்கள் உங்களுக்கு கிடைக்காது. மேலும், ஆஃப்லைன் வரைபடங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு காலாவதியாகலாம். எனவே, காலாவதியாகும் முன் அல்லது குறைந்தபட்சம் ஒரு வருட இடைவெளியில், நீங்கள் பதிவிறக்கம் செய்த வரைபடங்களை ‘புதுப்பித்து’ (Update) கொள்வது அவசியம்.



